Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Thipaan / 2015 மே 23 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆயுதம் தாங்கிய அரச படைகள் அச்சுறுத்தும் இயல்பினைக் கொண்டவர்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. எவ்வளவுதான் மக்களைத் தம்வசங் கவருமுகமாக ஓர் இராணுவம் நடவடிக்கை எடுத்தாலும் அவர்கள் ஜனநாயகக் கட்டமைப்புக்குள் ஏற்றுக் கொள்ள கூடியவர்கள் அல்ல என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
'பொலிஸார் வேறு, இராணுவம் வேறு. பொலிஸார் ஆயுதத்தை நம்பி வாழ்பவர்கள் அல்ல. பொலிஸார் மக்களுடன் மக்களாக மக்கள் நலம் கருதி கடமையாற்ற வேண்டியவர்கள். அவ்வாறான கடப்பாடு எதுவும் இராணுவத்துக்கு இல்லை' என தெரிவித்தார்.
இணுவில் இந்துக் கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவும் புதிய கட்டடத் திறப்பு விழாவும் கையளிப்பு விழாவும் கல்லூரியில் அமரர் நா.கணேசபிள்ளை அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு முக்கியமான கட்டம் இப்பொழுது உருவாகியுள்ளது. உள்ளூர் மக்களும் வெளியூர் உறவுகளும் ஒன்று சேர்ந்து எமது வடக்கு, கிழக்கு மாகாணங்களைக் கட்டி எழுப்பும் கடப்பாட்டினைக் கொண்டவர்களாக நாமுள்ளோம்.
எமது வளங்கள் பல விதங்களில் பாதிப்படைந்துள்ளன. வளங்கள் சில சூறையாடப்பட்டு பிற மாகாணங்களுக்கு களவாகக் கடத்தப்பட்டு வருகின்றன.
எம் நாளாந்த வாழ்க்கை வழமைக்குத் திரும்ப வேண்டுமெனில் இராணுவத்தினர் எமது மண்ணில் இருந்து வெளியேற வேண்டும்.
நாங்கள் யாவரும் சகோதரர்கள். எமக்குள் நல்லெண்ணம் மலரட்டும்; சுமூகமான உறவுகள் உருவாகட்டும். என்றெல்லாம் மேடைகளில் ஏறிக் கூறிவிட்டுப் போரின் போது யுத்த குற்றமிழைத்த இராணுவத்தினரைத் தொடர்ந்து எம் மண்ணில் ஆக்கிரமிப்புப் படையாக இருந்து ஆள விடுவது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாததொன்று.
எமது மாணவ சமுதாயத்துக்;கு மேற்படி தொடர் இராணுவப் பிரசன்னம் பலவிதமான பாதிப்புக்களைத் தந்து கொண்டிருக்கின்றது.
நாட்டின் எல்லைகளை காப்பாற்றுவதாகக் கூறி எமது மண்ணையும், வளங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டு ஒரு போர் முடிந்து 6 வருடங்களின் பின்னரும் வேண்டாத எம்மிடையே பலாத்காரமாக நிலை நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு அரச படையே! இராணுவமும், கடற்படையும் எமது பாதுகாப்புக்காக இராணுவத்தை இங்கு நிலை நிறுத்தியுள்ளதாக அரசாங்கம் அறிவிக்கின்றது.
ஆனால், நாங்கள் எவரும் எங்களைப் பாதுகாக்க நீங்கள் இங்கு இருங்கள் என்று இராணுவத்தினரிடம் கூறியதாகத் தெரியவில்லை.
அவ்வாறு யாராவது கூறியிருந்தால் அவர் இராணுவத்தின் அனுசரணையாளனாகவோ இராணுவத்துக்;குப் பயந்தவனாகவோ அல்லது அரசாங்கத்தின் ஒற்றனாகவோ தான் இருக்க வேண்டும்.
அண்மைக் காலங்களில் நடைபெறும் மிகக் கொடூரமான குற்றச் செயல்கள் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் இங்கு மக்களிடையே அறிந்திராத செயல்கள். 2009க்கு முன்னரான கிருஷாந்தியின் கொலைக்கும் மக்களுக்கும் தொடர்பேதும் இருக்கவில்லை.
ஆனால், தற்போது எமது இளைஞர் யுவதிகள் சுதந்திர தாகத்துடன் உருவாகக்கூடாது, அறிவில் சிறந்து விளங்கக் கூடாது, தொழிற் பாங்குடன் கடுமையாக உழைப்பவர்களாக உருவாகக் கூடாது
என்று திட்டமிட்டுப் பிழையான வழிகளில் அவர்கள் பாதை தவறி நடக்க உரிய சூழலை யாராவது வழி அமைத்துக் கொடுக்கப் பார்க்கின்றார்களோ என்று எண்ணவேண்டியுள்ளது.
எந்த ஒரு அரசாங்கமும் தமிழர்களுக்கு நன்மை செய்வோம் என்று வெளிப்படையாக சிங்கள மக்களிடையே தெரியப்படுத்தத் தயங்குகின்றது.
காரணம் அந்த அளவுக்கு சிங்களச் சகோதர சகோதரிகள் மனதில் நஞ்சை விதைத்துள்ளார்கள் அரசியல்வாதிகள்.
தமிழர்களுக்குத் தயை காட்டினால் தமக்குத் தேர்தலில் சிங்கள வாக்காளர்கள் தர அடையாளம் போட மாட்டார்களோ என்ற பயத்தில் எல்லா சிங்கள அரசியல் தலைவர்களும் கரவாகத்தான் எமக்கு உறுதிமொழிகளைத் தருகின்றார்கள். இது அபாயகரமானது.
1955ஆம் ஆண்டில் சேர் ஜோன் கொத்தலாவல என்ற அப்போதைய பிரதம மந்திரி வடமாகாணம் வந்து தீவுப் பகுதிகளில் தமிழ் மொழிக்கும் சிங்கள மொழிக்கும் சம அந்தஸ்த்து வழங்கப் போவதாக அறிவித்தார்.
1956ஆம் ஆண்டில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பண்டாரநாயக்க 24 மணித்தியாலங்களில் சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டுவரப் போவதாக அறிவித்தார்.
சிங்கள மக்கள் பெருவாரியாக பண்டாரநாயக்க அவர்களுக்கு வாக்களித்துத் தேர்தலில் வெற்றி வாகை சூட வழி வகுத்தனர்.
பின்னர் தமிழர்கள் வெகுவாக ஆட்சேபித்ததால் நியாயமான தமிழ்மொழிப் பாவனைக்கான ஒரு சட்ட வரைவைக் கொண்டு வந்தார்.
உடனே அவரின் வீட்டின் முன் சுமார் 200 பௌத்த பிக்குமார் கூடினர். கூடி பிரதமரை வெளியே அழைத்து என்ன சொன்னார்கள் தெரியுமா? நாங்கள் யாவரும் மிகவும் பிரயாசைப்பட்டு உங்களைப் பதவியில் ஏற்றியது தமிழ் மொழிக்கு நியாயமான இடம் கொடுக்கவா? இல்லை. சிங்களம் மட்டும் நாடு பூராகவும் பாவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே உங்களுக்கு இந்தப் பதவியைத் தந்தோம் என்றார்கள்.
உடனே அந்தச் சட்டவரைவைப் பண்டாரநாக்க. பிக்குகள் முன்னிலையிலேயே கிழித்தெறிந்து விட்டார். அடுத்த வருடம் அவர் ஒரு பௌத்த பிக்குவினாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதையேன் உங்கள் முன்னிலையில் இன்று இதைக் கூறுகின்றேன் என்றால், நாம் கரவாகக் காரியமாற்றினால் தப்பி விடலாம் என்று எண்ணுகின்றோம்.
அது அவ்வாறு நடப்பதில்லை. இன்று கரவாகத் தமிழர்களுக்கு நாம் உரிய உரித்துக்களைப் பின்னர் பெற்றுக் கொடுப்போம் என்று கூறுவோரை அவர்கள் பதவிக்கு வந்தபின் அவர்களுக்கு வாக்கை அளித்த பெருவாரியான சிங்கள மக்கள் இடமளிக்கமாட்டார்கள். சிறிசேன தருவார், ரணில் தருவார், சந்திரிக்கா தருவார் என்று நாம் எண்ணுவதெல்லாம் மடமை.
இன்றே நாங்கள் எல்லோருடனும் வெளிப்படையாக ஒரு ஒப்பந்தத்திற்கு வர வேண்டும். இதைத்தான் நாங்கள் செய்வோம்.
என்று சிங்களத் தலைவர்கள் கூற வேண்டும். இதுதான் எமக்கு வேண்டும் என்று தமிழ்த் தலைவர்கள் கூற வேண்டும். கரவாக காரியங்கள் ஆற்றக் கூடாது என்றே கூறிவைக்கின்றேன்.
உண்மையை உறுதியாகப் பற்றிக் கருமம் ஆற்றுங்கள். உண்மையை நோக்கி வழி நடப்பதால் அதில் வரும் தடங்கல்கள், தாமதங்கள் ஆகியவற்றை ஏற்க நாங்கள் மனமுவந்து ஆயத்தமாக இருக்க வேண்டும். 'பொய்மையும் வாய்மையிடத்தே புரைதீர்த்த நன்மை உண்டாகப் பெறின்' என்றான் வள்ளுவன். சில சமயங்களில் பொய்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் எம்மை நாடி வரும்.
ஆனால், அது ஒரு விதிவிலக்கான நடவடிக்கையே. வள்ளுவன் கூறிவிட்டான் என்று பொய்மை வழியையே கடைப்பிடிக்காதீர்கள்.
பொய்மை ஒரு விதிவிலக்கு. மெய்மையே வழி. இன்னொரு இடத்தில் வள்ளுவன் கூறுகின்றான் 'பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று' என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
5 hours ago
5 hours ago