2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சட்டத்தை மதிப்பது அருகி வருகின்றது: சபா.ரவீந்திரன்

Menaka Mookandi   / 2015 ஜூன் 04 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

சட்டத்தை மதிக்கின்ற நீதிக்கு தலை வணங்குகின்ற மற்றும் பெரியாரைக் கனம் பண்ணும் பழக்கங்கள் எமது சமுதாயத்தில் மிகவும் அருகி வருகின்றது. பணப்பலம், அரசியல் செவ்வாக்கு மற்றும் ஆட்பலத்தால் எதையும் செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் மேலோங்கியுள்ளதாக பருத்தித்துறை நீதவான் மா.கணேசராசாவுக்கு பருத்தித்துறை நகராட்சிமன்றத் தலைவர் சபா.ரவீந்திரனால் கையளிக்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி படுகொலை மற்றும் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து பருத்தித்துறை நகரசபையின் ஏற்பாட்டிலான ஆர்ப்பாட்டப் பேரணி பருத்தித்துறையில் புதன்கிழமை (03) நடைபெற்றது. இந்தப் பேரணியின் முடிவில் பருத்தித்துறை நீதவான் மா.கணேசராசாவிடம் கையளிக்குமாறு பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் மகஜரொன்று கையளிக்கப்பட்டது.

அந்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'நாட்டில் தற்போது சமூக சீரழிவுச் செயற்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், வடமராட்சிப் பகுதியிலும் கணிசமாக இவை காணப்படுகின்றன. குறிப்பாக போதைப்பொருள் பாவனை, மிதமிஞ்சிய மதுபோதை, தொலைக்காட்சி கையடக்கத் தொலைபேசி மூலமான கட்டுப்பாடற்ற உரையாடல்கள், வெளிநாட்டுப் பணம், அடாவடித்தனம், இடப்பெயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்றவை காரணமாக சமூக சீரழிவுகள் வளர்ந்துகொண்டு போகின்றன.

சட்டத்தை மதிக்கின்ற நீதிக்கு தலை வணங்குகின்ற மற்றும் பெரியாரைக் கனம் பண்ணும் பழக்கங்கள் எமது சமுதாயத்தில் மிகவும் அருகின்றது. பணப்பலம், அரசியல் செவ்வாக்கு மற்றும் ஆட்பலத்தால் எதையும் செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் மேலோங்கியுள்ளது.

இதன் விளைவாக சண்டைகள், குழப்பங்கள், பாலியல் வன்முறைகள், திருட்டு, கொள்ளை, கொலை, குடும்ப வன்முறைகள், கடத்தல்கள், பழிவாங்கல்கள், ஏமாற்று மோசடி, ஊழல், இலஞ்சம் போன்றன நிறைந்த சமூகமாக நாங்கள் மாறி வருகின்றோம். இது தொடர்ச்சியாக வாகன விபத்துக்கள், தற்கொலைகள், கருக்கலைப்புக்கள் என்று நீண்டு கொண்டே செல்கின்றது.

மாவட்ட நீதவானாகிய நீங்கள் பொலிஸாருக்கு உரிய பணிப்புக்களை விடுத்து, சகல குற்றச் செயல்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கி சமூகத்துக்கு ஒரு உத்தரவாதத்தை நிலை நாட்ட வேண்டுமென்றும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .