2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நீதிமன்றம் மீதான தாக்குதல்; இருவருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2015 ஜூன் 05 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

நீதிமன்ற கட்டத்தொகுதி மீது கடந்த 20ஆம் திகதி தாக்குதல் மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டில் வியாழக்கிழமை (04) கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களை, எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் பொ.சிவகுமார் வெள்ளிக்கிழமை (05) உத்தரவிட்டார்.

நீதிமன்ற கட்டடத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் வளாகத்தில் நின்றிருந்த வாகனங்களை அடித்து சேதமாக்கியமை ஆகியவற்றை செய்தவர்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை திரட்டிய பொலிஸார், அந்த வீடியோ ஆதாரங்களை வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அவ்வாறு வீடியோ ஆதாரத்தை வைத்து விசாரணை செய்தலில் இருவர் கைது செய்யப்பட்டனர். இவ்விருவரையே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

பல்கலைக்கழக மாணவனின் பிணை மனு பரிசீலனை

இதேவேளை, யாழ் நீதிமன்றத்தின் மீது கடந்த 20ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 43 சந்தேகநபர்கள் கொண்ட பிரிவில் உள்ளடங்கும் பல்கலைக்கழக மாணவனுக்கு பிணை வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்த நீதவான், பிணை வழங்குவது தொடர்பான கட்டளைக்காக பிணை மனு தொடர்பான விசாரணையை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

யாழ். நீதிமன்றத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டமை, யாழ். நகரப்பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் காண்காணிப்பகத்தை தாக்கியமை, வீதிகளில் ரயர் எரித்தமை மற்றும் வீதிச் சமிக்ஞை விளக்கை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் 130பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் உள்ளடங்கியுள்ள பல்கலைக்கழக மாணவனுக்கு பல்கலைக்கழகத்தில் பரீட்சை நடைபெறவுள்ளதால், அதற்குச் செல்வதற்கு பிணை வழங்குமாறு சட்டத்தரணியூடாக நீதிமன்றத்தில் பிணை மனுக்கோரியிருந்தார். இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .