2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குறித்து நிலையான ஏற்பாடு தேவை: டக்ளஸ்

Menaka Mookandi   / 2015 ஜூன் 10 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் நிலையான ஏற்பாடுகள் அவசியமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

'வடக்கு மாகாணத்தில் பல்வேறு இடங்களிலிருந்து தமிழ் மக்களைப் போன்றே முஸ்லிம் மக்களும் இடம்பெயர்ந்துள்ளனர். கடந்தகால தவறான தமிழ்த் தலைமைகளின் ஏகபோக செயற்பாடுகள் காரணமாக முஸ்லிம் மக்கள் வெறுங்கையுடன் வடக்கிலிருந்து விரட்டப்பட்ட துயரங்களை நாமறிவோம்.

இவ்வாறு விரட்டப்பட்ட முஸ்லிம் மக்களை புத்தளம் பகுதியில் தற்காலிகமாகக் குடியமர்த்துவதற்கும் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கும் எமது கட்சியின் மூலம் அப்போது எம்மாளான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்திருந்தோம்.

அதுமட்டுமல்லாமல், யாழ்.குடா நாடு பயங்கரவாதச் செயற்பாடுகளில் இருந்து மீட்கப்பட்டது முதல், முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் தொடர்ந்தும் நாம் வலியுறுத்தி வந்துள்ளதுடன், அதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுத்திருந்தோம். இது குறித்து எமது முஸ்லிம் மக்கள் நன்கறிவார்கள்.

எனினும், முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் தற்போது பல தடைகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது. இவ்வாறான தடைகளை ஏற்படுத்தும் போக்குகள் எவையாயினும், அவை அகற்றப்பட வேண்டும். இதற்குரிய நடவடிக்கைகளை உரிய அனைத்துத் தரப்பினரும் முன்வந்து எடுப்பது அவசியமாகும்.

எனவே, இவ்வாறான தடைகள் அகற்றப்பட்டு, முஸ்லிம் மக்கள் தங்களது சொந்த இடங்களில் நிலையான மீள்க் குடியேற்றத்தையும், அதற்கான அடிப்படை வசதிகளையும் பெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம்' என டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .