2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வடக்கு விவசாய விரிவாக்கத்துக்கு தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமனம்

Princiya Dixci   / 2015 ஜூன் 21 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண விவசாய திணைக்களத்தின் விரிவாக்கல் சேவைகளுக்கென தொழில்நுட்ப உதவியாளர்களாக தெரிவு செய்யப்பட்ட 14 பேருக்கான நியமனக் கடிதங்கள் வடமாகாண விவசாய அமைச்சின் அலுவலத்தில் வைத்து சனிக்கிழமை (20) வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் வழங்கினார்.

நியமனக் கடிதங்களை வழங்கிய பின்னர் உரையாற்றிய அமைச்சர்,

விவசாயப் போதனாசிரியர் பதவி நியமனம் பெறுவதற்கு விண்ணப்பதாரி க.பொ.த. உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் மூன்று பாடங்களும் சித்தி அடைந்திருப்பதோடு, விவசாயத்தில் டிப்ளோமா பட்டமும் பெற்றவராக இருக்க வேண்டும்.

ஆனால், க.பொ.த. உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் மூன்று பாடங்களும் சித்தி அடைந்திருப்பவர்கள் விவசாயப் போதனாசிரியர்களாக வர விரும்புவதில்லை. வேறு துறைகளுக்குச் செல்லவே விரும்புகிறார்கள். இதனால் போதனாசிரியர்களுக்குப் பற்றாக்குறைவு  நிலவுகிறது.

வடக்கில் போதிய அளவுக்கு விவசாயப் போதனாசிரியர்கள் இல்லாமல் இருப்பதால் எமது விவசாய அபிவிருத்தி வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. இதைக் கருத்திற்கொண்டு க.பொ.த. சாதாரணப் பரீட்சையிலும் சித்தியடைந்து விவசாயத்திலும் டிப்ளோமா பட்டம் பெற்றிருந்தால், அவர்களை சேவையில் இணைத்துக்கொள்ளும் வகையில் விவசாய விரிவாக்கத்துக்கான தொழில்நுட்ப உத்தியோகஸ்தர் என்னும் புதிய பணி நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கான சேவை பிரமாண குறிப்பு உருவாக்கப்பட்டு, நேர்முகத்தேர்வு மூலம் 14 பேர் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே 15 பேர் மத்திய அரசின் தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமனத்தின் மூலம் வடக்கு விவசாய அமைச்சில் இணைக்கப்பட்டுள்ளனர். இன்னும், இப்பணி நிலையில் 11 வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்றார்.

வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி. ஜெ.ஜெகநாதன் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .