2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

நல்லூரில் குறைவான மணலே கொட்டப்பட்டுள்ளது

George   / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணத்தில் தற்போது மணல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மணலை வீண் விரயம் செய்வதைத் தடுக்கும் நோக்குடனும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தைச் சுற்றி அதிகளவான மணல் இம்முறை கொட்டப்படவில்லை. பிரதட்டை அடிப்பவர்களுக்கு தேவையான வகையில் 50 கியூப் மணல் கொட்டப்பட்டுள்ளது என யாழ். மாநகர சபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் தெரிவித்தார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா தற்போது நடைபெற்று வருகையில் ஆலயத்தைச் சுற்றி வழமையாக போடப்படும் மணலின் அளவைவிட குறைவான அளவில் மணல் கொட்டப்பட்டிருந்தது. பிரதட்டை அடிப்பவர்களும் ஒரு பகுதியில் நேராக பிரதட்டை அடிக்கும் வகையில் மணல் கொட்டப்பட்டிருந்தது. இது தொடர்பில் ஆணையாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுது,

"கடந்த வருடம் 250 கியூப் மணல் கொட்டப்பட்டது. ஆனால் இம்முறை 50 கியூப் மணலே கொட்டப்பட்டது. தேவைக்கதிகமாக மணல் கொட்டப்படுதல் மணலை விரயமாக்கும். மணல் அள்ளும் நாகர் கோவில் பகுதியானது உவர் நிலமாக மாற்றமடைந்து அங்கு மக்கள் வசிக்க முடியாத சூழல் உருவாகும். நாங்கள் சௌகரியத்துக்காக அதிகளவு மணலை எடுத்து, இன்னொரு மக்களை அவதிக்குள்ளாக்க முடியாது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தற்போது கொட்டப்பட்டுள்ள மணல் பிரதட்டை அடிப்பவர்களுக்கு போதுமானதாகவுள்ளது.

நாகர் கோவிலில் மணல் அள்ளுவதற்கு தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் மாதாந்தம் 200 கியூப் மணல் அகழ்வதற்கு மட்டும் தற்போது அனுமதி வழங்கியுள்ளார். யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகனுடன் கலந்துரையாடியே இந்த 50 கியூப் மணலையும் நாங்கள் பெற்றுக்கொண்டோம்" என அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X