2025 மே 05, திங்கட்கிழமை

22 ஆவது ஆண்டு நினைவேந்தல் மிருசுவில் படுகொலை

Freelancer   / 2022 டிசெம்பர் 21 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

மிருசுவில் பகுதியில், 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட எண்மரின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல்,  மிருசுவில் தேவாலயத்துக்கு முன்னால் நேற்று (20) நடைபெற்றது.

 நினைவேந்தல் நிகழ்வில் பிரதான ஈகைச்சுடரை, மூன்று பிள்ளைகளையும் இராணுவத்தின் படுகொலைக்கு பறிகொடுத்த தாயார் ஏற்றி வைத்தார். 

சாவகச்சேரி நகர சபை முன்னாள் உறுப்பினர் கிஷோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், படுகொலை செய்யப்பட்டவர்களின் பெற்றோர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம், சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் க. வாமதேவன் உட்பட  பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஐந்து வயதுக்கும் 41 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர்.

தமது வீடுகளைப் பார்ப்பதற்காகச் சென்ற எட்டுப் பொதுமக்கள், 2000 டிசெம்பர் 19ஆம் திகதி இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டார்கள்.
உள்ளூர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, தமது வீடுகளையும், உடமைகளையும் பார்த்துவிட்டு, காட்டில் விறகு வெட்டி வரச் சென்றவேளை, அரைகுறையாகப் புதைக்கப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் சடலத்தை அங்கு கண்டதையடுத்து, மறுநாள் அதே பகுதிக்குச் சென்று குறித்த சடலத்தை அடையாளம் காண முற்பட்டவேளை, அங்கு நிலை கொண்டிருந்த இராணுவத்தினரிடம் அகப்பட்டார்கள்.

இவர்களில் எட்டுப் பேர் படுகொலை செய்யப்பட்டு, வீட்டு மலசலகூடக் குழியினுள் வீசப்பட்டதனர். கைது செய்யப்பட்டவர்களில் பொன்னுத்துரை மகேசுவரன் என்பவர், பலத்த காயங்களுடன் தப்பி வந்து,  தகவல் கொடுத்ததை அடுத்தே இக்கொலைகள் பற்றிய விவரங்கள் வௌயில் தெரியவந்தன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X