2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

27 வருடங்களின் பின் பருத்தித்துறை - கொக்கிளாய்க்கு பஸ் சேவை

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 19 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

27 வருடங்களின் பின்னர், பருத்தித்துறை – கொக்கிளாய் பிரதேசங்களுக்கிடையிலான பஸ் சேவை, நாளை திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது.

பருத்தித்துறையில் இருந்து வெளியிடங்களுக்கு செல்வதற்கான பஸ்கள் இருக்கின்ற போதிலும் சாரதிகள் பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை போக்குவரத்து சபை பருத்தித்துறை சாலை முகாமையாளர் எஸ்.கந்தசாமி ஞாயிற்றுக்கிழமை (19) தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'பருத்தித்துறை முதல் கொக்கிளாய் வரையிலான பஸ் சேவை 27 வருடங்களின் பின்னர் நாளை திங்கட்கிழமை (20) முதல் ஆரம்பமாகவுள்ளது' என்றார்.

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்த சேவை இடைநடுவில் தடைப்பட்டது. தொடர்ந்து, நாட்டின் சூழல் மாறிய போதும், பஸ்கள் பற்றாக்குறை காரணமாக இந்த சேவை முன்னெடுக்க முடியவில்லை.

இந்நிலையில், அண்மையில் யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 10 பஸ்களை எமது சாலைக்கு வழங்கினார். அவற்றில் 2 பஸ்கள், நாளை திங்கட்கிழமை (20) முதல் கொக்கிளாய் வரை சேவையில் ஈடுபடவுள்ளன.

அத்துடன், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பருத்தித்துறையில் குடியேறியிருக்கும் முஸ்லிம் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பருத்தித்துறையிலிருந்து அக்கரைப்பற்று வரையில் சேவையை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்த சேவையை விரைந்து ஆரம்பிப்பதற்கு ஆளணிப் பற்றாக்குறை நிலவுகின்றது. ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் ஆளணி பற்றாக்குறைக்கு நிவர்த்தி செய்யப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .