2025 ஜூலை 02, புதன்கிழமை

37,000 கிலோ பார்த்தீனியம் அழிப்பு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 01 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடமாகாண விவசாய அமைச்சால் 02 வாரங்களில் 37,700 கிலோ பார்த்தீனியம் கொள்வனவு செய்து அழிக்கப்பட்டுள்ளதாக  வடமாகாண விவசாய அமைச்சு  தெரிவித்தது.

இது தொடர்பில் வடமாகாண விவசாய அமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

'வடமாகாண விவசாய அமைச்சின் பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக பொதுமக்களிடமிருந்து பார்த்தீனியத்தை ஒரு கிலோவுக்கு 10 ரூபா என்ற அடிப்படையில்  கொள்வனவு செய்து அழிக்கும் திட்டத்தை  யாழ். மாவட்டத்தில் முன்னெடுத்து வருகிறது.

விவசாயத்துக்கும் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் உள்ளூர்த் தாவரங்களுக்கும் பெருங்கேடு விளைவிக்கும் அந்நிய ஊடுருவலான பார்த்தீனியம் எமது சூழலில் வேகமாக பரவுகிறது.

பார்த்தீனியத்தை ஒழிப்பதற்கு கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், அந்நடவடிக்கைகளில் தொடர்ச்சியான கண்காணிப்பு இல்லாத காரணத்தால் பார்த்தீனியத்தின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்நிலையிலேயே வடக்கு மாகாணசபையின் விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு பார்த்தீனியத்தை முற்றாக இல்லாது ஒழிக்கும் நோக்கில் பல தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு கட்டமாக பார்த்தீனியத்தை பொதுமக்களிடம் இருந்து கிலோவுக்கு 10 ரூபா என்ற அடிப்படையில்  கொள்வனவு செய்து, பார்த்தீனியம் முளைப்பதற்குச் சாதகமான சூழல் இல்லாததும்      மக்கள் குடியிருப்புகள் இல்லாததுமான இடங்களைத் தெரிவு செய்து அப்பகுதிகளில் எரியூட்டி வருகிறது.

இத்திட்டம்  ஆரம்பித்து முதல் வாரத்தில் 9,230 கிலோவும் இரண்டாவது வாரத்தில் 27,470 கிலோவுமாக இதுவரையில் 37,700 கிலோ பார்த்தீனியம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கான கொடுப்பனவு ஏற்கெனவே வழங்கப்பட்ட நிலையில், இரண்டாவது வாரம் பார்த்தீனியத்தை ஒப்படைத்தவர்களுக்கான பணக்கொடுப்பனவு நாளை புதன்கிழமை (02) சிறுப்பிட்டி மேற்கு ஜனசக்தி பொதுநோக்கு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு வழங்கப்படவுள்ளது.

பார்த்தீனியத்தின் கொடுங்குணங்கள் காரணமாக பார்த்தீனியத்தை அழிக்காதவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் விதத்திலான சட்டமொன்றை இலங்கை அரசாங்கம் இயற்றியுள்ளது.

1999ஆம் ஆண்டின் 35ஆம் இலக்கத் தாவரப் பாதுகாப்புச் சட்டத்தின்படி பார்த்தீனியம் விளை நிலங்களில் அல்லது வீட்டு வளவுகளில் காணப்படின், அதனை அழிப்பது உரிமையாளர்களின் கடமையாகும். அழிக்கத் தவறுபவர்களுக்கு ஆறு மாதங்கள் வரை சிறைவாசம் விதிக்கவும் ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடவும் முடியும். இந்தப் பார்த்தீனியம் ஒழிப்புச் சட்டம் 2015ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியில் இருந்து வடக்கு மாகாணத்தில் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படவுள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சு முன்னெடுக்கும் பார்த்தீனியம் ஒழிப்புத்திட்டங்களில் பொதுமக்களை இணைந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

பார்த்தீனியத்தை கொள்வனவு செய்யும் திட்டம்  ஜுலை மாதம் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பார்த்தீனியம் ஒழிப்பில் ஈடுபடும் பொதுமக்கள் இக்காலப்பகுதியில் சனி, ஞாயிறு தவிர்ந்த வார நாட்களில் பிற்பகல் 3 மணி தொடக்கம் 6 மணிவரை ஈவினைப் பிள்ளையார் கோவில், இணுவில் புகையிரத நிலையம், சுன்னாகம் மேற்கு முத்தமிழ் மன்றம், உரும்பிராய் மேற்கு மூன்று கோவில், ஊரெழு கிராம அபிவிருத்திச் சங்கம், தெல்லிப்பழை கமநலசேவைகள் நிலையம், தெல்லிப்பழை தந்தை செல்வாபுரம் வாசிகசாலை, கட்டுவன் முனியப்பர் கோவில், வசாவிளான் கூட்டுறவுச் சங்கம், நிலாவரைக் கிணறு, நீர்வேலிக் கண்ணாடித் தொழிற்சாலை, கோண்டாவில் இராமகிருஷ;ணா பாடசாலை ஆகிய இடங்களுக்கு அருகாமையில் உள்ள பார்த்தீனியம் சேகரிப்பு மையங்களில் பார்த்தீனியத்தை ஒப்படைக்குமாறும் மேலதிக தகவல்கள் தேவைப்படின் விவசாயப் போதனாசிரியர்களிடம் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .