2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

75 பிள்ளைகளின் செலவை பொறுப்பேற்க புலம்பெயர் தமிழர்கள் தயார்: சி.வி.கே

Menaka Mookandi   / 2014 நவம்பர் 05 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்

பதுளை, கொஸ்லாந்த, மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக பெற்றோரை இழந்த 75 பிள்ளைகளை பொறுப்பேற்பதற்கு வடமாகாண சபை தயாக்ராக உள்ளது. அவர்கள் தங்களது பாடசாலைக் கல்வியை முடிக்கும் வரையான அனைத்து செலவுகளையும் புலம்பெயர் தமிழர்கள் ஏற்கத் தயாராக இருக்கின்றனர் என்று வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் இன்று புதன்கிழமை (05) தெரிவித்தார்.

கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக்கட்டிடத் தொகுதியில் இன்று புதன்கிழமை (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது, 

வருடத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 70 சதவீமான நிதியை செலவு செய்தால் அது வெற்றிகரமான செயற்பாடாகும். ஆனால் வடமாகாண சபையானது 70 சதவீதத்திற்கும் அதிகமான நிதியை செலவு செய்துள்ளது.

வடமாகாணத்தில் திட்டங்களுக்காக அடுத்த வருடங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியையே அவ்வாறு செலவு செய்யவில்லையென குறை கூறுகின்றனர்.

அதிலும் குறிப்பாக இரணைமடு குடிநீர் திட்ட நிதி, ஐஐடிபி யின் திட்ட நிதி போன்றவற்றையே சுட்டிக்காட்டுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

பெற்றோரை இழந்த பிள்ளைகளை பொறுப்பேற்க தயார்

பதுளை, கொஸ்லாந்த, மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக பெற்றோரை இழந்த 75 பிள்ளைகளை பொறுப்பேற்பதற்கு வடமாகாண சபை தயார் நிலையில் இருப்பதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

மேற்படி பிள்ளைகளை பொறுப்பேற்று பம்பலப்பிட்டி இந்து கல்லூரி, யாழ்.கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலுள்ள விடுதிகளில் தங்க வைத்து கல்வி நடவடிக்கையில் ஈடுபடுத்தவும் தீர்மானித்துள்ளோம்.

மேற்படி பிள்ளைகளை வடமாகாண சபை பொறுப்பேற்றால், அந்த பிள்ளைகள் பாடசாலையில் கல்வி கற்று வெளியேறும் வரையான முழுச்செலவுகளையும் தாங்கள் ஏற்றுக்கொள்வதாக புலர்பெயர்ந்து வெளிநாடுகளிலுள்ளவர்கள் எங்களுக்கு உறுதிமொழிகள் அளித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை இன்னும் சில தினங்களில் கொண்டு சென்று கொடுப்போம். தற்பொது நிவாரண பொருட்களுடன் 2 இலட்சம் ரூபாய்க்கு அதிகமான நிதியும் சேர்ந்துள்ளது. அத்துடன், வடமாகாண சபை உறுப்பினர்களும் தலா 10 ஆயிரம் ரூபாய் நிதி தருவதாக ஒப்புதலளித்துள்ளனர் என்றார்.

ஊழல் பணம் மீளப்பெறப்பட வேண்டும்

வடமாகாணத்தில் நெல்சிப் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டத்தில் 100 மில்லியன் ரூபாய் ஊழல் செய்த பொறியியலாளரிடமிருந்து ஊழல் செய்த பணம் விரைவாக திரும்பப்பெறுமாறு கோரி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

உலக வங்கியின் 3,500 மில்லியன் ரூபாய் செலவில் நெல்சிப் திட்டத்தின் கீழ் வடக்கில் 120 வேலைத்திட்டங்கள் 2010ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரையில் மேற்கொள்ளப்பட்டன. இந்த திட்டத்தை செயற்படுத்திய பொறியியலாளரே இந்த ஊழல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகள், ஆளுநரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இருந்த போதும் விசாரணை நடைபெறுவதற்கு முன்னரே பொறியியலாளர் ஊழல் செய்த பணம் மீளப்பெறப்பட வேண்டும். இல்லையேல், அவர் அதனை செலவு செய்துகொள்ளவோ அல்லது அந்நிதியைக்கொண்டு தப்பித்து செல்லவோ சந்தர்ப்பங்கள் இருப்பதாக வடமாகாண அவைத்தலைவர் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .