2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

85 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கழிவகற்றல் திட்டம்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 13 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா

யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர்வழங்கல் மற்றும் சுகாதார திட்டத்தின் கீழ், 85 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில்  மனித கழிவுகளை அகற்றும் திட்டம் யாழ் மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக யாழ் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் சமூக அணி திரட்டல் விசேடதூதுவர் ரி.பாலசுப்பிரமணியம் வியாழக்கிழமை (13) தெரிவித்தார்.

யாழ். மாநகரசபை பிரதேசத்தில் மிகவும் நெருக்கமான குடியிருப்புக்கள் காரணமாக மலசலகூட குழிகளுக்கும் கிணறுகளுக்கும் இடையிலான தூரம் நியம அளவை விட மிகவும் குறைவாக காணப்படுகிறது. அதன் காரணமாக மனித கழிவின் மூலம் நிலத்தடி நீர் மாசடைகின்றது.

எனவே இந்த பிரதேசங்களிலுள்ள 30 கிராமஅலுவலர் பிரிவுகளை உள்ளடக்கி 16 ஆயிரம் மலசல கூடங்கள், குளியலறைகள் மற்றும் சமயலறை கழிவுகளை குழாய்கள் மூலம் இணைத்து 25 நீர்ப்பம்பி நிலையங்களில் சேகரித்து பிரதான கழிவகற்றல் குழாய் மூலம் கல்லுண்டாய் வெளியில் அமையவுள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சேகரிக்கப்படும்.

சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட நீரானது விவசாய நீர்ப்பாசனத்துக்கு பயன்படுத்தவும், எஞ்சிய திண்மக் கழிவுகள் கூட்டுப் பசளையாக மாற்றப்பட்டு பயிர் செய்கைக்கும் பயன்படுத்தப்படவுள்ளது.

இந்த திட்டமானது 2 கட்டங்களாக பிரிக்கப்பட்டு வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளன. முதலாம் கட்டத்தில் 14 கிராம அலுவலர் பிரிவுகளும், இரண்டாம் கட்டத்தில் 16 கிராமஅலுவலர் பிரிவுகளிலும் இந்த திட்டமானது செயற்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்திற்கான நிதி உதவியை இலங்கை அரசாங்கத்தினூடாக ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்குகின்றது. அடுத்த வருட முற்பகுதியில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .