2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அரசியல் தலையீட்டின் காரணமாக வீதிக்கு பூட்டு

Editorial   / 2019 மார்ச் 26 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்

 

சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்தி வந்த வந்த வீதி ஒன்று, அரசியல் தலையீட்டின் காரணமாக, யாழ்ப்பாணம் மாநகர சபையால் மூடப்பட்ட சம்பவமொன்று, யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை பகுதியில், .... இடம்பெற்றுள்ளது.

கொழும்புத்துறை - 3ஆம் குறுக்குத் தெருவே, இவ்வாறு தனியார் சிலரது கோரிக்கையால், அரசியல் தலையீட்டின் காரணமாக, மூடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து, மேலும் தெரியவருவதாவது,

கொழும்புத்துறையில், 2015ஆம் ஆண்டு, தனியார் காணி உரிமையாளர்கள் சிலரின் ஒப்புதலுடன், அவர்களால் வீதி நிர்மாணிப்பதற்கான காணி வழங்கப்பட்டது.

இருப்பினும், வீதி நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாதிருந்த நிலையில், காணி உப பிரிவிடுகை ஊடாக, காணி உரிமையாளர்களின் சம்மதத்துடன், 2015 - 2016ஆம் ஆண்டு காலப்பகுதியில், குறித்த காணி, பொதுமக்களின் பாவனைக்காக, நகர அபிவிருத்திசபையால், யாழ்ப்பணாம் மாநகரசபையின் அனுமதியுடன் இணைக்கப்பட்டு, ஒரு வீதியாக்கப்பட்டது.

அதன் பின்னர், யாழ்ப்பாணம் மாநகர சபையால் ஒழுங்கை வரைப்படம் தயாரிடப்பட்டு, வீதியின் ஒரு பகுதி தார் வீதியாகவும் மற்றைய பகுதி மணல் வீதியாகவும் நிர்மாணிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. 

இந்நிலையில், குறித்த இரு வீதிகளின் ஒரு வீதியின் எதிர்த்திசையில் வசிப்பவர்கள் எனக் கூறப்படும் ஒரு சிலரால், 2 மாதங்களுக்கு முன்னர், குறித்த வீதிக்கு குறுக்காக, கொங்ரீட் தூண்கள் நாட்டப்பட்டு வீதி மூடப்பட்டது. எனினும், அப்பகுதி மக்கள், அந்தக் கொங்ரீட் தூண்களை அகற்றிவிட்டு வீதியைப் பயன்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், தொடர்ச்சியாக மேலும் இரு தடவைகள் குறித்த நபர்களால், குறித்த வீதி மூடப்பட்டு வந்த நிலையில், இது குறித்து, அப்பகுதி மக்கள்
யா​ழ்ப்பாணம் மாநகர சபையில் முறையிட்டனர்.

இதன்போது, தங்களால், இந்த வீதிக்கு அனுமதி வழங்கிய ஆவணங்கள் தொலைந்துவிட்டனவென, மாநகரசபையால், பொதுமக்களுக்கு பதிலளிக்கப்பட்டது. 

இதையடுத்து, வீதியை மூடும் குறித்த நபர்கள், மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்டைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்தக் கலந்துரையாடலின் பின்னர்,  யாழ் மாநகர ஆணையாளரால் 19.03.2019 அன்று திகதியிடப்பட்டு, 2789/1 இலக்க நில அளவை வரைபடத்துக்கு வழங்கப்பட்ட காணி உப பிரிவிடல் அனுமதியை இரத்துச் செய்வதாகவும் அவ்வரைபடத்தின் வடக்குப் பக்கத்தில் காண்பிக்கப்பட்ட ஒழுங்கையானது, மூடப்பட வேண்டுமெனவும், குறித்த காணி உரிமையாளருக்கு கடிதம் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவையடுத்து, குறித்த வீதி மூடப்பட்டது.

இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் ​தெரிவித்த அப்பகுதி மக்கள் கொழும்புத்துறை - 3ஆம் குறுக்குத் தெரு மூடப்பட்ட விவகாரம் தொடர்பில், தாம் நீதிமன்றத்தை நாடப்போவதாக, தெரிவித்துள்ளனர்.

மாநகரசபையின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டால் தாம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளரால், குறித்த வீதியை மூடுமாறு, எழுத்து மூலம் உத்தரவு அனுப்பப்படுவதற்கு முன்னரே, சிலர் இவ்வீதியை கொங்ரீட் தூண்களைக் கொண்டு மூடியதாகவும், அவர்கள் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X