Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 13 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியில், காணாமல் ஆக்கப்பட்ட இளைஞன், இராணுவ முகாமுக்குள் சென்றதை தான் நேரில் கண்டதாக, சாட்சி ஒருவர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில், நேற்று (12) சாட்சியமளித்தார்.
கடந்த 1996ஆம் ஆண்டு, அரியாலை பகுதியில், இளைஞன் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சி. சதிஸ்தரன் முன்னிலையில், இடம்பெற்று வருகின்றன.
நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, தமது மகன் இராணுவ முகாமுக்குள் சென்றதாகவும் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டதாகவும் நேரில் கண்ட பெண் ஒருவர் பலாலி இராணுவ முகாமுக்கு வந்து வாக்குமூலம் வழங்கினார் என்றும் அந்தப் பெண் தற்போது இறந்துவிட்டார் என்றும் குறித்த இளைஞனின் தாயார் நீதிமன்றில் சாட்சியமளித்தார்.
இந்நிலையில், குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது, 5ஆவது பிரதிவாதியான சட்டமா அதிபர் சார்பில் மூத்த அரச சட்டவாதி நீதிமன்றில் முன்னிலையானார்.
அதனை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, இந்த வழக்கில் மனுதாரரால் முற்படுத்தப்பட்ட கண்கண்ட சாட்சியிடம் அரச சட்டவாதி குறுக்குவிசாரணையை முன்னெடுத்தார்.
இதன்போது, அரியாலை துண்டி இராணுவ முகாமுக்குள் குறித்த இளைஞன் சென்றதை தான் அவதானித்ததாகவும் அவரை மறுநாள் காலை காணவில்லை என்று உறவினர்கள் தெரிவித்ததாகவும், குறுக்கு விசாரணையின் போது கண்கண்ட சாட்சி சாட்சியமளித்தார்.
இது தொடர்பில், எங்கேயாவது சத்தியக்கூற்று வழங்கியுள்ளீர்களா? என்று சாட்சியிடம் அரச சட்டவாதி கேள்வி எழுப்பினார். இதற்கு சாட்சி, “இல்லை” என்று பதிலளித்தார்.
தொடர்ந்து இளைஞனின் தாயாரிடமும் தந்தையாரிடமும் சாட்சியம் பெறப்பட்டது.
“எனது மகன், துண்டி இராணுவ முகாமுக்குள் செல்வதை பெண் ஒருவர் கண்டார். அவர் அது தொடர்பில் எங்களுடன் பலாலி இராணுவத் தலைமையகத்துக்கு வந்து வாக்குமூலம் வழங்கினார். எனினும், அவர் தற்போது இறந்துவிட்டார்” என்று இளைஞனின் தாயார் சாட்சியமளித்தார்.
இதையடுத்து, வழக்கு தொடர் விளக்கத்துக்காக, எதிர்வரும் டிசெம்பர் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
8 hours ago