2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

’அறிந்திராதவர்களே அபகீர்த்தியை ஏற்படுத்த முனைகின்றனர்’

Freelancer   / 2023 மார்ச் 28 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நிலைப்பாட்டையும் மக்களையும் அறிந்திராதவர்களே  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மீது அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் கருத்துளை சொல்லமுனைந்து, தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் ஊடகப் பேச்சாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார். 

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (27) ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்ற போர்வையில் ஒரு சிறு கூட்டத்தினர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர்.

“இதன்போது அங்கு சென்ற சிலர், அவர்களை வெளியேறுமாறு கோஷமிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் அந்தச் சிலரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தரப்பினர் என்றும் சுட்டிக்காட்டிய ஏற்பாட்டாளர் ரஜீவ்காந்த் என்ற நபர், ஊடகங்களுக்கு கருத்துரைத்ததுடன், அக்குழப்பத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தரப்பினர் மது போதையில் இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

“ஆனால், அச்சம்பவத்துக்கும் அங்கு கூறப்பட்ட கருத்துக்கும் அங்கு சென்றவர்களுக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை.

“அதேவேளை, யாழ். பல்கலைக்கழக சமூகமும் மேற்படி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரது சந்திப்பை புறக்கணித்திருந்தனர்.

“இதனூடாக யாழ். கல்விச் சமூகம் மற்றும் மக்களின் மனநிலையையோ இங்குள்ள தேவைப்பாடுகளையோ குறித்த ஏற்பாட்டாளர்கள் அறிந்திருக்கவில்லை என்பது புலனாகின்றது.

“அந்தவகையில், குறித்த குற்றச்ச்சாட்டை முன்வைத்த ஏற்பாட்டாளர் ரஜீவ்காந்த் என்ற நபர் தனது தனிப்பட்ட சுயலாபங்களுக்காக எம்மீது சேறுபூசி, தன்னை வழிநடத்தும் தரப்பினரை திருப்திப்படுத்த முயற்சித்துள்ளமை தெளிவாக தெரிகின்றது” என்றார்.  (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .