2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஒரு மாதத்தில் 400 கிலோகிராம் கஞ்சா மீட்பு

Editorial   / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

 

வடக்கில், இந்த ஆண்டின் முதல் மாதத்தில் மாத்திரம், 400 கிலோ கிராமுக்கும் மேற்பட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் இதனுடன் தொடர்புடைய 111 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் வடக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்ணான்டோ தெரிவித்தார்.

காங்கேசன்துறையில், இன்று (02) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த ஆண்டில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் அதனோடு தொடர்புடைய சந்தேகநபர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

கடந்த 10 நாள்களில் மாத்திரம் 380 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டது என்றும் 10 நாள்களுக்குள் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறிய அவர், இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சாவில், 90 சதவீதமானவை யாழ்ப்பாணத்திலேயே மீட்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் கேரள கஞ்சா கடத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் வகையில், விஷேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது என்றும் அவர் கூறினார்.

அதன்படி, எதிர்வரும் நாள்களில், அச்சுவேலி, இளவாளை, பருத்தித்துறை, காங்கேசன்துறை ஆகிய பிரதேசங்களில், விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் இத்தேடுதல் நடவடிக்கைகளை, பகிரங்கமாக முன்னெடுக்கும் அதேநேரம், இரகசியமான முறையிலும் தமது விசாரணை சோதனை நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் கூறினார்.

எனவே, இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் இதன் காரணமாகவே குறித்த கஞ்சா கடத்தல் அதிகளவில் இடம்பெறும் பகுதியிலுள்ள மக்களது விவரங்கள் திரட்டப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X