2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கல்வி மட்டத்தில் வடக்குக்கு 9ஆவது இடம்

Editorial   / 2018 நவம்பர் 25 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜிதா 

வடக்கு மாகாணம், கல்வி மட்டத்தில் 9ஆவது மாகாணமாக விளங்குவதற்கு, வடக்கு மாகாண சபையே பொறுப்பேற்க வேண்டுமென, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா புவனேந்திரன் தெரிவித்தார். 

அத்துடன், வடக்கு மாகாண சபையின் கடந்த 5 வருட ஆட்சியில், மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு தவறிழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். 

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் கலந்துரையாடல், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில், நேற்று முன்தினம் (24) மாலை நடைபெற்றது.  

அந்தக் கலந்துரையாடலின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  இது குறித்து தொடர்ந்து கருத்துரைத்த அவர், கல்வித் தரத்தில், வடக்கு மாகாணம் 9ஆவது இடத்திலும் கிழக்கு மாகாணம் 8ஆவது இடத்திலும் காணப்படுவதாகவும் வடக்கு - கிழக்கு மாகாணங்களில், மாகாண சபை உருவாக்கப்பட்டதன் பின்னரே, இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். 

பல்கலைக்கழகத்தில், தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்வதாகக் குற்றஞ்சாட்டிய அவர், பாடசாலைகளில், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாட ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை காணப்படுவதாகவும் கவலை தெரிவித்தார்.  அந்த வகையில், வடக்கு மாகாணத்தில் உள்ள கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாட ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டதாகத் தெரிவித்ததுடன், அவ்வாறு விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்ட போது, விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகக் காணப்பட்டதாகவும் அவர் கூறினார். 

பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படும்போது, வடக்கு மாகாணத்தில் மாத்திரம் பட்டதாரி அல்லாதவர்களுக்கு மத்திய அமைச்சு நியமனம் வழங்குவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், அமைச்சர்களின் சிபாரிசுகளுடன், பாடசாலைக்குச் செல்லாதவர்களுக்கும் தொண்டர் ஆசிரியர்களுக்கும் நியமனம் வழங்கப்படுவதாகவும் சாடினார். 

கடந்த 5 வருடங்களாக, மாகாண சபையில் சண்டையும் சச்சரவும் மாத்திரமே இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டிய அவர், தற்போது, ஓய்ந்து நிம்மதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.  

ஆனால், இந்த 5 வருட ஆட்சியில், மாணவர்கள் அடுத்த மட்டத்தை அடையவில்லையெனவும் இதற்கு மாகாண சபையே பொறுப்பேற்க வேண்டுமெனவும் அவர் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .