2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘சந்தேகநபர் இன்றி வழக்கை மேற்கொண்டு நடத்த முடியுமா’

எம். றொசாந்த்   / 2018 ஒக்டோபர் 10 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான குற்றவாளியாக காணப்பட்ட சுவிஸ்குமார் தப்பிச் செல்வதுக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள இரண்டாவது சந்தேகநபர் இன்றி வழக்கை மேற்கொண்டு நடத்த முடியுமா? என்பது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையை பெறுமாறு குற்றபுலனாய்வு பிரிவினருக்கு ஊர்காவற்துறை நீதிவான் இன்று (10) உத்தரவிட்டுள்ளார்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான குற்றவாளியாக காணப்பட்ட சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் தப்பி செல்ல உதவினார்கள் எனும் குற்றச்சாட்டில் அக்கால பகுதியில் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் அக்கால பகுதயில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.ஸ்ரீகஜன் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய குற்றபுலனாய்வு பிரிவினர் தனி ஒரு வழக்கினை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்தனர்.

அதனை அடுத்து வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஏ.ஜெயசிங்க கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அதேவேளை உப பொலிஸ் பரிசோதகர் எஸ். ஸ்ரீகஜன் தலைமறைவானார்.

அந்நிலையில் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்று (10) புதன்கிழமை குறித்த வழக்கு நீதிவான் ஏ.ஜூட்சன் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது லலித் ஜெயசிங்க சார்பில் சட்டத்தரணிகளான சுபாஸ்கரன் மற்றும் வசீமுள் அக்ரம் ஆகியோருடன் சிரேஸ்ட சட்டத்தரணி துஷித் ஜோன்தாஷன் முன்னிலையாகியிருந்தார். அதே போன்று குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரியும் மன்றில் முன்னிலையாகிருந்தனர்.

மன்றில் முன்னிலையான குற்றப்புலனாய்வு அதிகாரி, குறித்த வழக்கில் இரண்டாவது சந்தேகநபரை கைது செய்வது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்றுக்கு அறிவித்தார்.

இதனையடுத்து குறித்த குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரி மன்றுக்கு தெரிவித்தமை தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்த சட்டத்தரணி துஷித் ஜோன்தாசன், குறித்த வழக்கு விசாரணை முடிவடைந்து சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு கடந்த தவணையில் மன்றுக்கு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது இரண்டாவது சந்தேகநபரை கைது செய்ய வேண்டும் என கூறுகின்றனர். எனவே இரண்டாவது சந்தேகநபர் இல்லாமல் வழக்கினை நடாத்த முடியுமா என்பது தொடர்பாகவும் மன்று ஆராய வேண்டும் என மன்றில் கோரினார்.

அதையடுத்து, குறித்த வழக்கில் இரண்டாவது சந்தேகநபர் இன்றி வழக்கை நடாத்துவது தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தின்  ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு நீதிவான் உத்தரவிட்டார்.

அத்துடன் வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜனவரி மாதம் 30ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X