Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 26 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
வடக்கு - கிழக்கு அபிவிருத்தி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்வதால், தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லையென, புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
மேலும், தமிழ் மக்களின் தேவைகளுக்காக, அவர்களின் விருப்பத்துடனேயே, அந்தச் செயலணியில் கலந்துகொள்ளத் தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், "இக்கூட்டத்தில், கூட்டமைப்பு கலந்துகொள்வதால், தமிழ் மக்களுடைய அரசியல் தீர்விலோ அல்லது இதர விடயங்களிலோ எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை" என்று தெரிவித்த அவர், வடக்கு மாகாண முதலமைச்சரை எதிர்ப்பதற்காக, இத்தகையதொரு முடிவை கூட்டமைப்பு எடுக்கவில்லையென்றும் கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம், அண்மையில் நடைபெற்ற போது, ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளக் கூடாதென, வடக்கு முதலமைச்சர் தெரிவித்த விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டதெனத் தெரிவித்த அவர், இதையடுத்து, மக்களுக்காக அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.
அந்த முடிவை, கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான தமிழரசுக் கட்சி, டெலோ, புளொட் ஆகியன இணைந்தே எடுத்திருந்தாகவும், அதில் தான் கலந்துகொள்ளாது விடினும், ஏனையோர் கலந்துகொண்டனர் எனவும் குறிப்பிட்டார்.
இனியும் அபிவிருத்தி வேலைகளில் தாங்கள் பங்கெடுப்பதைத் தவிர்த்துக் கொண்டிருக்காமல், அபிவிருத்தியையும் செய்துகொண்டு, அரசியல் தீர்வையும் நோக்கிப் பயணிக்கவுள்ளதாகக் கூறியே, இச்செயலணியில் கலந்துகொள்வதென முடிவெடுக்கப்பட்டதெனவும் அவர் கூறினார்.
இக்கூட்டத்துக்குப் போகாமல் விடுவதால், உடனடியாக அரசமைப்பில் மாற்றம் கொண்டு வந்து தீர்வைக் காணப் போவதில்லையெனத் தெரிவித்த அவர், அதற்குப் போவதால், இயலுமான வேலைகளைச் செய்து கொண்டு பயணிக்கலாமெனவும் கூறினார்.
"இவ்வாறு தொடர்ந்தும் தீர்வு வரும், வரும் என்று இருந்தால், எமது மக்கள் தான் பாவம். ஆகையால், அவர்களுக்காக அபிவிருத்தியை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது" என, அவர் தெரிவித்தார்.
அத்துடன், பணத்தையும் செல்வாக்கையும் எதிர்பார்த்து, இத்தகையதொரு முடிவு எடுக்கப்படவில்லையெனவும், அபிவிருத்தியை நோக்காகக் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
20 May 2025
20 May 2025