2025 மே 21, புதன்கிழமை

‘சிங்கள மகா வித்தியாலயத்துக்காக படைத்தளத்தை அகற்றக் கோரும் எண்ணமில்லை’

Editorial   / 2018 ஓகஸ்ட் 27 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

சிங்கள மகா வித்தியாலயத்தில் இயங்கும் இராணுவப் படைத்தளத்தை அகற்றக் கோரும் எண்ணம், தமக்கு தற்போது இல்லையென, யாழ்ப்பாண சிங்கள மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத் தலைவர் கெனடி சேவியர் தெரிவித்தார்.

கடந்த 1956ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டு, 12 ஆண்டுகளுக்குப் பின்னர், 1965ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் சிங்கள மகா வித்தியாலயம் நிறுவப்பட்டது.

அன்று முதல் 1985ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில், யாழ்ப்பாணத்தில் குறித்த பாடசாலை இயங்கி வந்துள்ளது. இதையடுத்து, 1985ஆம் ஆண்டு, நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக, அந்தப் பாடசாலை மூடப்பட்டது.

இந்நிலையில், குறித்த பாடசாலை கட்டடத்தில், தற்போது இராணுவத்தினர், தமது 512 படைப் பிரிவின் பாரிய முகாமை அமைத்துள்ளனர்.

தற்போது, மீளவும் குறித்த பாடசாலையை ஆரம்பிக்கும் நோக்குடன், பாடசாலையில் கற்பித்த ஆசிரியர்களும் பழைய மாணவர்களும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்..

இந்நிலையில், “ சிங்கள மகா வித்தியாலயக் கட்டத்தில் இயங்கும் இராணுவத்தினரின் 512 படைத்தளத்தை அகற்றுமாறு, கோரிக்கை விடுத்துள்ளீர்களா?” என, பழைய மாணவர் சங்கத் தலைவர் கெனடி சேவியரிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், இராணுவ முகாமை அகற்றும் சிந்தனை தம்மிடம் இல்லையெனவும் தமக்கு இராணுவ முகாம் அவசியமெனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், முதற்கட்டமாக, வாடகைக்கு இடமொன்றைப் பெற்று, அதில் ஆரம்பப் பிரிவை நடத்த எண்ணியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாடசாலையை மீள ஆரம்பிப்பது தொடர்பில், யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியுடன் பேசியதாகத் தெரிவித்ததுடன், அதைக் கேட்டு, அவர் மிகுந்த சந்தோசம் அடைந்ததாகவும், தன்னால் இயன்ற உதவிகளையும் தேவைகளையும் வழங்க தளபதி உடன்பட்டுள்ளாரெனவும் அவர் கூறினார்.

இதற்கமைய, இதன் முதற்கட்டமாக, பாடசாலையை ஆரம்பித்து, முன்னேற்றத்தைக் காட்டியப் பின்னரே, தமது தேவைகளைக் கல்வித் திணைக்களத்திடம் கோரிப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X