2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

’டக்ளஸை சந்திக்க விருப்பம் இல்லை’

Princiya Dixci   / 2021 மார்ச் 18 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

ஜனாதிபதியின் அறிவிப்புக்கமைவாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை தான்  சந்திக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ள நிலையில்,  அவரை ஒருபோதும்  தாம் சந்திக்கப் போவதில்லையெனத் தெரிவித்த வடக்கு, கிழக்கு ஆகிய மாகாணங்களில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி யோ.கனகரஞ்சினி, அவரை சந்திக்க விருப்பம் இல்லையெனவும் கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு, அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தாவும் பொறுப்புக் கூற வேண்டும் என, தொடர்ச்சியாக கூறி வருகின்றனரென்றும் கூறினார்.

தற்போதைய ஜனாதிபதி,  பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போதே, தங்கள் உறவுகளில் அதிகமானோர் காணாமல் ஆக்கப்பட்டனரெனத் தெரிவித்த அவர், அதன் பின்னர் மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் காலத்திலும், காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகளுக்கு அரசாங்கமோ, அவ்வரசாங்கத்தில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவினாலோ எந்த்த் தீர்வும் கிடைக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

மாறாக, தங்கள் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபியும் காரணம் எனத் தெரிவித்த தாய்மார்களை நீதிமன்றில் நிறுத்தப் போவதாக அமைச்சர் தெரிவித்திருந்தார் என ஞாபகமூட்டிய  யோ.கனகரஞ்சினி, இந்த நிலையில்,  அவரை எப்படி சந்திக்க  முடியுமெனவும் வினவினார்.  

அவ்வாறு சந்தித்ததாலும், அமைச்சரால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் என்ன நியாயத்தை பெற்றுத் தரமுடியுமெனவும், அவர் கேள்வியெழுப்பினார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இலங்கை அரசினால் நீதி கிடைக்கும் என்ற நம்பிகை அற்றுப் போய்விட்டதனது தெரிவித்த அவர், இந்த நிலையில், அந்த அரசாங்கத்தின் பிரதிநிதியாகவுள்ள அமைச்சரை சந்திப்பதில் பயனில்லை என்றும் கூறினார்.

எனவே, வடக்கு, கிழக்கு ஆகிய மாகாணங்களில் இருந்து வலிந்து காணாமல்  ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் சார்பாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திப்பதற்கு தாம் தயாரில்லையெனவும்,  யோ.கனகரஞ்சினி உறுதியாக தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .