Janu / 2026 மார்ச் 03 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய திருப்பயணக் குழு ஒருங்கிணைப்பாளர் சே. நல்லதம்பி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
"திருவிழாவிற்காக நாங்கள் கச்சதீவிற்குள் நுழைந்த போது, அங்கிருந்த கடற்படையினரும் பொலிஸாரும் வரம்பு மீறிச் செயற்பட்டனர். பக்தர்களுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினர். இதனால் எனக்கும் அவர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. இந்தியத் தூதரகத்துடன் தொடர்பு கொள்ள முயற்சித்தும், அங்கிருந்த பக்தர்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டு அமைதியாக உள்ளே சென்றோம்.
திருவிழா முடிந்து திரும்பும் போதும் இதே நிலை நீடித்தது. அங்கிருந்த இளம் கடற்படை அதிகாரி ஒருவர் தமிழக இளைஞர்களுடன் மோதலில் ஈடுபடும் வகையில் நடந்து கொண்டார். வெயில் மற்றும் நெரிசல் காரணமாக பக்தர்கள் பலர் மயக்கமுற்றனர். இதனால், மக்களைக் கடற்கரையில் சற்று நேரம் அமர அனுமதிக்குமாறு இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதன் போது ஏற்பட்ட முரண்பாட்டில், கடற்படை அதிகாரி ஒருவர் இளைஞர்களைத் தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் திரண்டு நின்று, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தண்டனை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கடற்படை உயர் அதிகாரி ஒருவர் அங்கு வந்து நிலைமையைச் சீர்செய்து, மக்களை அமர அனுமதித்தார்.
பக்தர்கள் உள்ளே நுழைய நான்கு வழிகள் மட்டுமே காணப்படுகின்றன. பெருமளவான பக்தர்கள் வரும் போது அதனைச் சமாளிக்க போதுமான வசதிகள் இல்லை. அதேபோல, திருவிழா முடிந்து முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் செல்லும்வரை, பொதுமக்கள் பல மணி நேரம் தடுத்து வைக்கப்படுகின்றனர்.
சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் 10 முதல் 12 மணி நேரம் வரை கடும் வெயிலில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தெய்வாதீனமாக எவ்வித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை.
இந்திய மற்றும் இலங்கை பக்தர்களுக்குத் தனித்தனியான பாதைகளை அமைத்துக் கொடுத்தால் நெரிசலைத் தவிர்க்கலாம். அதேபோல, மக்களை நீண்ட நேரம் தடுத்து வைக்கும் முறையை நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அடுத்த ஆண்டு இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க இந்திய அரசும், இலங்கையின் வெளிவிவகார அமைச்சும், யாழ்ப்பாணம் ஏற்பாட்டுக்குழுவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என அவர் தெரிவித்தார்.
பு.கஜிந்தன்


17 minute ago
23 minute ago
27 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
23 minute ago
27 minute ago
57 minute ago