2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

‘திட்டமிட்டு பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது’

Editorial   / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த், எஸ்.ஜெகநாதன்

“யாழ் மாநகர சபையில் தன்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ஒரு திட்டமிடப்பட்ட பொய்க் குற்றச்சாட்டாகும்” என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (16) அவர் யாழ்.மாநகர மேயர் இமானுவல் ஆனோல்ட்க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாணம் மாநகர சபையின் கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர் மு.றெமிடியஸ் எமக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்கள் முன்வைத்துள்ளதாக பத்திரிகை செய்திகள் மூலம் அறியவந்துள்ளது.

அதில், யாழ். நகர் மத்தியில் மாநகர சபை புதிய கட்டடத் தொகுதி அமைப்பதற்கு முன் 6 கடைகள் கட்டப்பட்டது அந்தக் கடைகள் கட்டப்பட்ட காலம் தற்போதய மாகாண அவைத்தலைவரும் முன்னாள் மாநகரசபை ஆணையாளர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் கட்டப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக முன்னாள் முதல்வர் எமக்கெழுதிய 25.04.2011 ஆம் திகதிய கடிதத்துக்கு எமது 30.04.2011 திகதிய நான்கு பக்க கடிதம் மூலம் தெளிவாக பதிலனுப்பியிருந்தேன்.

இது ஒரு திட்டமிடப்பட்ட பொய்க் குற்றச்சாட்டாகும், எனது முழு ஆணையாளர் பதவிக் காலத்திலும் இந்தக் கட்டடங்கள் அமைக்கப்படவில்லை.

இவர்கள் குறிப்பிடும் 6 கடைகளும் மாநகர சபையால் கட்டப்பட்டவை அல்ல. 1970 களின் முற்பகுதியில் அப்போது மாநகர முதல்வராகவிருந்த காலஞ் சென்ற அல்பிரட் துரையப்பாவினால் தனித்தனியாக 6 பேருக்கு நிலக்குத்தகையாக வழங்கப்பட்ட காணியில் அவர்கள் தனித்தனியாக தமது முதலீட்டில் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்ட கடைகளே ஆகும். இவற்றுக்கான ஒப்பந்தங்கள் கூட எழுதப்படவில்லை.

மேலும், கோவில் காணியில் தங்களுடைய பதவிக் காலத்தில் சோலைவரியை தனது பெயரில் மாற்றியுள்ளார் என்ற குற்றச்சாட்டு எதுவித அடிப்படையுமற்றது. இது இவர்களது நிர்வாக அறிவு சூனியத்தை எடுத்துக்காட்டுகின்றது. ஆதனவரி பெயர்மாற்றத்துக்கென தெளிவான நடைமுறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றியே  அலுவலர்கள் செயற்படுகின்றார்கள். இப்படியொரு குற்றச்சாட்டை முன்வைக்கு முன்பாக ஆதனவரிப் பகுதியில் உள்ள பதிவேடுகளையும் தொடர்புடைய ஆவணங்களையும் பார்வையிட்டு விசாரணை செய்திருக்கவேண்டும். இது எனக்கெதிரான குற்றச்சாட்டா அல்லது மாநகர சபை நிர்வாகத்துக்கு எதிரானதா என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

நான் யாழ்ப்பாண மாநகரசபையின் கணக்காளராக நியமிக்கப்பட்ட 1972 ஆம் ஆண்டு மற்றும் ஆணையாளராக நியமனம் பெற்ற 1975 ஆம் ஆண்டிலும் சரி உள்ளுராட்சி சேவையைப் பொறுத்தவரை உயரதிகாரிகள் அந்தந்த பிரதேசத்திலேயே வசிக்க வேண்டும் என்ற கோட்பாடு இருந்தது. இதனாலேயே மாநகர எல்லைக்குள் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தேன். சொந்தமான வீட்டின் தேவை எனக்கிருந்தது. இந்த நிலையில் மாநகர எல்லைக்குள் சொந்தக் காணி இல்லாததால் நல்லூர் சட்ட நாதர் சிவன் கோவில் தர்மகத்தாவிடம் குத்தகை அடிப்படையில் காணியை பெற்றிருந்தேன்.

நான் ஆணையாளராக இருந்த காலத்தில் நடைபெறாத விடயங்களை அவ்வாறு நடைபெற்றதாக கூறுவது அப்பட்டமான பொய் என்பது தெளிவாகும். இவை தொடர்பான ஆவணங்கள் யாவும் தங்களது அலுவலகப் பகுதியிலேயே இருப்பதால்  இவற்றையெல்லாம் ஆராய்ந்து விசாரணை செய்து இது என்னை அவமானப்படுத்துவதுக்காகவும் அரசியல் ரீதியாக அபகீர்த்தியேற்படுத்தவும் எனது சுய கௌரவத்தை பாதிக்கும் கூற்றுக்கள் என்பதால் இதற்கான முக்கியம் கொடுத்து மாநகரசபையின் அடுத்த கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பித்து உதவுமாறு வேண்டுகின்றேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X