2025 மே 21, புதன்கிழமை

‘தொல்லியல் திணைக்களத்தை முற்றுகையிட வேண்டிய நிலை ஏற்படும்’

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

“தொல்லியல் திணைக்களத்தின் தலைமை அதிகாரியாக பௌத்த பிக்கு ஒருவர் இருக்கும் நிலையில் திணைக்களத்தின் அண்மைக்கால செயற்பாடுகள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலை தொடர்ந்தால் வட மாகாணசபை உறுப்பினர்கள் தொல்லியல் திணைக்களத்தை முற்றுகையிட்டுப் தொடர்ச்சியான போராட்டங்களை நடாத்த வேண்டிய நிர்ப்பந்தம் நிச்சயமாக உருவாகும்” என வட மாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே. சிவஞானம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறல்கள் அதிகரித்து வருவது தொடர்பாகவும் தொல்லியல் திணைக்களம் பௌத்த விகாரைகளை அமைக்க முயற்சிப்பதும் புத்தர் சிலைகளை வைக்க முயற்சிப்பதும் குறித்து விசேட கவனயீர்ப்பு கருத்து ஒன்றை இன்று முல்லைத்தீவு மாவட்ட சபை உறுப்பினர் து. ரவிகரன் வட மாகாண சபைக்கு முன்வைத்தார்.

இதையடுத்து குறித்த விடயம் தொடர்பில் தன்னுடைய கருத்து தெரிவிக்கும்போதே சீ.வி.கே சிவஞானம் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்போது மேலும் அவர் கருத்து கூறுகையில்,

“தொல்லியல் திணைக்களத்தின் அண்மைக்கால செயற்பாடுகள் எல்லைமீறி சென்று கொண்டிருக்கின்றது. தொல்லியல் திணைக்களத்தின் தலைமை அதிகாரியாக இருந்து கொண்டிருப்பவர் ஒரு பௌத்த பிக்கு என நான் அறிந்திருக்கிறேன்.

தலைமைப் பொறுப்பில் சிவில் அதிகாரி ஒருவர் இருக்க வேண்டிய நிலையில் பௌத்த பிக்கு ஒருவர் இருப்பாரேயானால் அங்கு பக்கச்சார்வு இருப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்து கொண்டிருக்கின்றன.

இதேபோல் வனஜீவராசிகள் திணைக்களத்தின் செயற்பாடுகளும் எல்லை மீறி சென்று கொண்டிருப்பதை அவதானித்துக் கொண்டிருக்கின்றோம். இதனடிப்படையில் உறுப்பினர் து. ரவிகரன் கூறிய கருத்துக்களையும் அடிப்படையாக வைத்துக் கொண்டு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் கவனத்துக்குகு இந்த விடயத்தை கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அவர்களும் இந்த விடயத்தில் தீர்க்கமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும். தொடர்ச்சியாக நாங்களும் இவ்வாறான அடாவடிகளை பார்த்துக் கொண்டிருக்கவோர சகித்துக் கொள்ளவோ இயலாது.

இதே நிலை தொடருமாக இருந்தால் தொல்லியல் திணைக்களத்தை முற்றுகையிட்டு வட மாகாண சபை உறுப்பினர்கள் தொடர் போராட்டங்களை நடாத்த வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும். இவ்வாறான எச்சரிக்கைகளை மாகாண சபையில் முன் எப்போதும் நான் கூறியதில்லை. ஆனால் இப்போது கூறவேண்டிய தேவை எழுந்துள்ளது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X