2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

தொழில்நுட்பக் கல்லூரி காணி விவகாரம்: செப். 08இல் தீர்ப்பு

Editorial   / 2019 ஜூலை 29 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜித்தா

 

யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பக் கல்லூரிக்கான கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு ஒதுக்கப்பட்ட காணி குறித்து, “மெல்ரா” எனும் நிறுவனத்தால் தொடர்ப்பட்ட வழக்கின் தீர்ப்பு, செப்டெம்பர் மாதம் 08ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக, யாழ்ப்பாணப் பிரதேசச் செயலாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் தலைமையில், இன்று (29) நடைபெற்றது.

​இதன்போது, யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பக் கல்லூரிக்காக, யாழ்ப்பாணம் பிரதேசச் செயலாகத்தால் வழங்கப்பட்ட காணியொன்று, ஏற்கெனவே மெல்ரா என்ற வடிசாலைக்குக் குத்தகைக்கு எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால், கட்டடத்துக்காக ஒதுக்கப்பட்ட 450 மில்லியன் ரூபாய் நிதி மீளப்பெறப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பக் கல்லூரிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த போதே, யாழ்ப்பாணப் பிரதேசச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், மெல்ரா நிறுவனத்தால் இக்காணி விவகாரம் குறித்து, நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு நடைபெற்று வருதாகவும், செப்டெம்பர் மாதம் 08ஆம் திகதி, இந்த வழக்குக்கான தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், மொத்தமாக 132 பேர்ச்சஸ் காணி மெல்ரா நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டிய நிலையில், ஏற்கெனவே, திருநகர் பகுதியில் 84 பேர்ச்சஸ் காணி இருப்பதால், அக்காணியை, நன்கொடையாக வழங்க, காணி ஆணையாளர் அனுமதித்துள்ளதாகத் தெரிவித்த அவர், இதையடுத்து, உயர் தொழில்நுட்பக் கல்லூரிக்கு வழங்கப்பட்ட காணியை, கல்லூரிக்கே வழங்குவதற்கான ஆதரவை மெல்ரா நிறுவனம் வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

இதையடுத்து, கருத்துரைத்த ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் மாவை சேனாதிராஜா, வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர், கட்டடம் நிர்மாணிப்பதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு, யாழ்ப்பாணப் பிரதேசச் செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .