2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நீதிமன்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் தொடர்பில் விசாரணை

George   / 2017 ஏப்ரல் 07 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

நபரொருவருடைய சாரதி அனுமதி பத்திரத்தை நீதிமன்ற உத்தரவின்றி பொலிஸ் உத்தியோகஸ்தர் பறிமுதல் செய்து தமது உடமையில் வைத்து இருந்தமை தொடர்பில், நீதிமன்ற பொலிஸ் உத்தியோகஸ்தரிடம் விசாரணைகளை மேற்கொண்டு மேல் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், வெள்ளிக்கிழமை (07) உத்தரவு இட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “நபர் ஒருவர், கடந்த ஆண்டு யாழ். நீதவான் நீதிமன்றம், வழக்கு ஒன்றில் தனது சாரதி அனுமதிப்பத்திரத்தை, ஓராண்டுக்கு இரத்து செய்துள்ளதாக யாழ்.மேல் நீதிமன்றில் முறையீடு செய்தார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மேல் நீதிமன்றம், குறித்த நபருடைய சாரதி அனுமதி பத்திரத்தை ஒரு வருடகாலத்துக்கு  அல்லாமல் 7 மாத காலத்துக்கு இரத்து செய்யுமாறு உத்தரவு இட்டது.

அந்நிலையில், தனது சாரதி அனுமதி பத்திரம் தனக்கு வழங்கப்படவில்லை என குறித்த நபர் மீண்டும் மேல் நீதிமன்றில் மீளாய்வு மனு தாக்கல் செய்தார்.

அதன் மீதான விசாரணை வெள்ளிக்கிழமை (07) யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துகொள்ளப்பட்ட போது, நீதவான் நீதிமன்ற பதிவாளர், மூல வழக்கு பிரதியுடனும் சாரதி அனுமதி பத்திரத்துடன் மேல் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தார்.

அந்த வழக்கின் மூல பிரதியினை மேல் நீதிமன்றம் பரிசீலனை செய்த போது, அந்த வழக்கில் சாரதி அனுமதி பத்திரத்தை நீதவான் இரத்து செய்யுமாறு தனது கட்டளையில் குறிப்பிடவில்லை என்பதனை மேல் நீதிமன்றம் கண்டு கொண்டது.

அதனை அடுத்து, சாரதி அனுமதி பத்திரம் எங்கே? இருந்தது என நீதிபதி, பதிவாளரிடம் கேட்ட போது, நீதவான் நீதிமன்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் வசம் உள்ளது என்றார்.

எவ்வாறு சாரதி அனுமதி பத்திரத்தை நீதிமன்றில் பாரப்படுத்தாமல், நீதிமன்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் தனது உடமையில் வைத்திருந்தார் என நீதிபதி கேட்ட போது, பதிவாளார் அது தொடர்பில் தெரியவில்லை என பதிலளித்தார்.

அதனை அடுத்து நீதிபதி, சாரதி அனுமதி பத்திரத்தை எவ்வாறு தமது உடமையில் நீதிமன்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் வைத்திருக்க முடியும் என்பது தொடர்பில் பொலிஸ் பூரண விசாரணைகளை மேற்கொண்டு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான், மேல் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவு இட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .