2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

புனர்வாழ்வுக்கு நிதி இல்லை

George   / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

“வட மாகாணத்தில் முக்கியமான துறையான புனர்வாழ்வுக்கு, 2017ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கப்படவில்லை. எனவே, ஒதுக்கீடு செய்யப்படாது உள்ள குறைந்தளவான நிதியிலிருந்து ஒரு பகுதியை ஒதுக்கீடு செய்து, முக்கியமான திட்டங்களை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம்” என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றும் போதே, செவ்வாய்க்கிழமை இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஏற்கெனவே சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டிருந்த முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளிகளாக காணப்பட்ட 538 பயனாளிகளுக்கு, மொத்தமாக 65.63 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டில், இருக்கை மலசலகூடங்களை அமைத்துக் கொடுக்கும் செயற்றிட்டத்தினை முன்னெடுத்திருந்தோம்.

இதில் அமைச்சின் பங்களிப்பாக 122,000 ரூபாய் மற்றும் பயனாளியின் பங்களிப்பாக  40,000 ரூபாய் என்பவற்றை சேர்த்து  ஒரு மலசலகூடத்துக்கான தொகையாக 162,000 ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக, கடந்த வருடம் சுகாதார அமைச்சினால் 20.34 மில்லியன் ரூபாய் , 538 பயனாளிகளுக்கான ஆரம்ப கொடுப்பனவுக்காக செலவிடப்பட்டிருந்தது.

மேலும், இவ்வருடத்தில் கிடைக்கப்பெற்ற 25 மில்லியன் ரூபாயைச் சேர்த்து, தற்போது வரை 210 மாற்று வலுவுடையோருக்கான விசேட மலசலகூட நிர்மாணப்பணிகளை பூர்த்தி செய்துள்ளோம். ஏனையவை, பகுதியளவில் பூர்த்தியடைத்த நிலையிலுள்ளன.

இதனை முழுமையாக நிறைவுசெய்ய தேவையான 20 மில்லியன் ரூபாய்  நிதி, இவ்வருடத்தில் கிடைக்காமையால், 2017 ஆம் ஆண்டில் மிகுதிப் பணிகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம். மேலும், போதிய நிதி  கிடைக்கப்பெறும் பட்சத்தில், இவர்களின் இருக்கை மலசலகூடத்துக்கான நீர் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் எண்ணியுள்ளோம்.

அத்துடன், வட மாகாணத்தில் முக்கியமான துறைகளில் ஒன்றாக புனர்வாழ்வும் உள்ளது. ஆனால், 2017ஆம் ஆண்டுக்காக இத்துறைக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. எனவே, ஒதுக்கீடு செய்யப்படாது உள்ள சிறியளவிலான நிதியிலிருந்து குறிப்பிட்ட அளவு நிதியினை இத்துறைக்கு ஒதுக்கீடு செய்து 2017ஆம் ஆண்டு இத்துறையின் கீழ் முக்கியமான திட்டங்களை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம்” என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X