2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

மக்களுக்கு பணியாற்ற அனைத்து உறுப்பினர்களும் முன்வர வேண்டும்

Editorial   / 2018 ஏப்ரல் 11 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா

“சுத்தமான பசுமை நகரை நோக்கி” எனும் தொனிப்பொருளில் மத்திய மாகாண அரசின் உதவிகள் மற்றும் ஒத்துழைப்புடன், மாநகர மக்களுக்கு பணியாற்ற அனைத்து உறுப்பினர்களையும் முன்வருமாறு யாழ்.மாநகர சபை மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் அழைப்பு விடுத்தார்.

யாழ்.மாநகர சபையின் கன்னியமர்வு இன்று (11) யாழ்.நல்லூர் வீதியில் அமைந்துள்ள யாழ்.மாநகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சபையில் தனது கன்னியுரையாற்றும் போதே ஆர்னோல்ட் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

பசுமையான மாநகரம் எனும் தொனிப் பொருளுடன் பிரதானமான 7 விடயங்களையும், 31 துணை விடயங்களையும் முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிட்டோம்.

அதற்கு ஏற்றவாறு, இந்த நகரத்தின் சுற்றுச்சூழல் மற்றும் மக்களும், அவர்களின் வாழ்வாதாரமும், வாழ்க்கைத்தரமும் ஒழுங்கமைக்கப்படல் வேண்டும்.

யாழ். மாநகர சபையின் முதல்வராக கடமைப்பொறுப்பினை ஏற்ற நாளில் இருந்து மாணவனாக நிர்வாகத்துறைகளின் செயற்பாடுகளையும், மக்களின் தேவைகளையும், கழிவகற்றல் முகாமைத்துவம், வர்த்தக தொழில்துறை உட்பட ஊழியர்கள், அதிகாரிகள் நிதி சார்ந்த விடயங்களையும் கண்டறிந்து கொண்டேன்.

மாநகர சபையில் உள்ள தேவைகளையும், உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும், நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு.

யாழ்.மாநகர சபைக் கட்டிடம் புதுப்பொலிவுடன் அதே இடத்தில் அமையும். மாநகரத்தின் திண்மக் கழிவகற்றல் முறைமை வினைத்திறனுடன் செயற்பட்டு, நகரம் சுத்தமாக்கப்படும். சாத்தியமான வழிமுறைகளின் கீழ் மாநகரம் முழுவதிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம். நிலத்தடி நீர் மாசடைதலைத் தடுக்கும் வகையில், மலசல கூட கழிவுகள் கலக்காதவகையில், பாதாள சாக்கடை திட்டத்தினை நடைமுறைப்படுத்தல். மாநகரத்திற்கு நவீன முறையிலான புதிய வடிகால் அமைப்பு அறிமுகம் செய்தல். மநாகர எல்லைக்குள் காணப்படும் போக்குவரத்து நெரிசல்களுக்கு உடனடித் தீர்வு காணுதல். முன்னைய நிர்வாகத்தில் இடம்பெற்ற முறைகேடுகள், ஊழல்களுக்கு உடனடி விசாரணை சேவை வழங்கல், மாநகரத்தின் மக்கள் உடனடியாக தொடர்புகொள்ள புதிய பொறிமுறைகளை உருவாக்கவுள்ளோம்.

யாழ்.மாநகரத்தின் நிர்வாக விடயத்தினை சரியான முறையில் முன்னெடுக்க வேண்டும். கடந்த காலத்தில் யாழ்.மாநகர சபையில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றன. அந்த முறைப்பாடுகள் உரிய முறையில் பரிசீலணைக்கு எடு;த்துக்கொள்ளப்படும். வடமாகாண சபையின் உள்ளுராட்சி அமைச்சு முறைகேடுகள் விடயத்தில் முன்னெடுக்கும் அனைத்து செயற்பாடுகளுக்கும் இந்த அவை அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கும்.

இத்தகைய அடையாளங்களுடனும், அடிப்படைகளுடனும், “சுத்தமான பசுமை மாநகரை நோக்கி” என்ற கருதுகோளுடன் கட்சி பேதங்களுக்கு அப்பால், மத்திய மாகாண அரசுகளின் உதவிகளுடனும், ஒத்துழைப்புக்களுடனும், எல்லோரும் ஒன்றிணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .