2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் போராட்டத்தில் குதித்தனர்

Princiya Dixci   / 2022 மே 26 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்

மண்ணெண்ணெய் இல்லாமையால் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மண்ணெண்ணெய்யை பெற்றுத் தரக் கோரி, முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள், இன்று (26) கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு  சுனாமி நினைவாலயத்தில் இருந்து காலை 10.30க்கு பேரணியை ஆரம்பித்து, முல்லைத்தீவு மாவட்டக் கடற்தொழில் நீரியல்வளத் திணைக்கள அலுவலகம் உடாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் வரை அவர்கள் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலகத்துக்க்கு முன்னால் கடற்தொழிலாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது மாவட்டச் செயலாளர் க.விமலநாதன், போராட்டக்காரர்களை உள்ளே அழைத்து, அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஏற்றுக்கொண்டார்.

“சாலை தொடக்கம் கொக்குளாய் முகத்துவாரம் வரையான எமது  மீனவர்கள் மற்றும் தென்னிலைங்கையில் இருந்து வருகை தந்து தொழில் புரியும் மீனவர்களுக்கும் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, நாயாறு போன்ற எரிபொருள் நிலையங்கள் ஊடாகவே  எரிபொருள் விநியோகம் நடைபெற்று வருகின்றது.

“இருந்த போதிலும் இவ் எரிபொருள் நிலையங்களுக்கு வரும் எரிபொருளானது எமது மாவட்ட மீனவர்களுக்கு போதுமானதாகவில்லை. கடந்த 08.05.2022  தொடக்கம் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மண்ணெண்ணெய் வரவில்லை.  இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. “அத்துடன், விலையேற்றம் காரணமாக மக்கள் பட்டிணிச்சாவை  எதிர்நோக்கியுள்ளனர்.

“எனவே, தயவுசெய்து எமது மீனவ மக்களின் இந்நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் தொழில் புரிவதற்கான எரிபொருளை பெற்றுத்தருமாறு, மீனவர்கள் சார்பாகவும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் அமைப்பு சார்பாகவும் கேட்டுக்கொள்கின்றோம்” என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இதன்போது கடற்தொழிலாளர்களிடம் கருத்துத் தொரிவித்த மாவட்டச் செயலாளர் க.விமலநாதன், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது பொதுவாக எல்லா மாவட்டத்திலும் மண்ணெண்ணெய்த் தட்டுப்பாடு உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது. மீனவர்கள் மாத்திரமல்ல விவசாய உற்பத்தி வீதமும் குறைந்துள்ளது.

“எரிபொருள் விநியோகத்துக்கு பொறுப்பான  பிராந்திய முகாமையாளருடன் கதைத்துள்ளோம். இன்று இரண்டு லோட் மண்ணெண்ணெய் அனுப்புவதாக உறுதிமொழி தந்துள்ளார்கள்.

“மாவட்ட மீனவர்களின் கோரிக்கைறை கடற்றொழில் அமைச்சுக்கும் எரி சத்தி அமைச்சுக்கும் நாங்கள் அனுப்பவுள்ளோம்” என்றார்.

குறித்த போராட்டத்தை மீனவர்கள் ஆரம்பித்த போது,  சம்பவ இடத்துக்கு வருகைதந்த இராணுவத்தினர் மண்ணெண்ணெய் பெற்றுத்தருவதாக மீனவர்களுடன் கலந்துரையாடி போராட்டத்தை  நிறுத்த முயற்சித்திருந்தனர். இருப்பினும், மீனவர்கள் அதற்கு உடன்படாமல் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X