2025 மே 17, சனிக்கிழமை

‘யாராலும் நன்மை கிட்டாது’

Editorial   / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்ற, அறிவிக்கப்படக் கூடியவர்கள் என்ற அனைவருமே, தமிழ் மக்களுடைய அபிலாஷைகளுக்கு மாறானவர்களெனத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், இவர்களில் யார் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டாலும், அவர்களால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மைகளும் ஏற்படப்போவதில்லையெனவும் கூறினார்.

யாழ்ப்பாணத்தில், நேற்று  (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், எந்தவொரு வேட்பாளரையும் தெரிவு செய்வதான முடிவுக்கு தமிழ் மக்கள் செல்வதில் எந்தவிதமான நன்மைகளும் ஏற்படப் போவதில்லையெனவும் இந்த இடத்தில், வரதராஜப் பெருமாள், மக்களை தம் பக்கம் ஈர்க்கின்ற நோக்கத்தோடு தன்னுடைய கருத்தைக் குறிப்பிட்டிருக்கிறாரெனவும் தெரிவித்தார்.

அதாவது தாங்கள் எல்லாம் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர்கள் என்றும் தமிழ் மக்களுக்காக விடுதலைப் புலிகள் மட்டும் போராடவில்லை தாங்களும் போராடியவர்கள் என்று ஏதோ போலித் தோற்றமொன்றை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முற்படுகின்றாரெனவும், அவர் கூறினார்.

எங்களைப் பொறுத்தவரையில் அவர் ஒரு விடயத்தை மறந்து விட்டார் என்றே கூறுகின்றோம். அதாவது தாங்கள் எல்லாம் இந்த விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள் என்ற வார்த்தையைச் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டார். 30 ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுடைய விடுதலைக்காக போராடிய பொழுது இவர் உட்பட இவர் குறிப்பிட்ட அத்தனை தரப்புகளும் இந்திய மற்றும் இலங்கை இராணுவத்தோடு இணைந்து இந்த விடுதலைப் புலிகளைக் காட்டிக் கொடுத்து சொந்த மக்களைக் கடத்திக் கொலை செய்து கப்பம் பெறுகின்ற செயற்பாடுகளில் ஈடபட்டவர்கள் தான்.

ஆகவே, இவர்கள் தாம் விடுதலைக்காக போராடியவர்கள் என்று கூறுவதற்கு எந்த அருகதையும் அற்றவர்கள்.

ஆகவே விடுதலைக்காக போராடுதல் என்ற அர்த்தத்தை அவருக்கு அருகில் இரப்பவர்கள் யாராவது சொல்லிக் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். ஆகவே, இந்த இடத்திலே என்னைப் பொறுத்தவரையில் இலங்கையில் வரப்போகின்ற ஜனாதிபதித் தேர்தல் என்பது போட்டியிடப் போகின்றவர்கள் யாருமே தமிழ் மக்களின் அபிலாசைகளை ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல. தமிழ் தேசத்திடைய இருப்பை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களும் அல்ல.

ஆக, அவர்கள் எந்தக் கட்சி சார்ந்த வேட்பாளர்களாக இருந்தாலும் தமிழ்த் தேசத்தின் இருப்புக்கு எதிராகவே செயற்படக் கூடியவர்கள் என்பது தான் நிலைமை. ஆகவே எங்கள் மக்கள் ஆழமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டுமென்று கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம் எனவும், அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .