2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு விசேட குழு

Gavitha   / 2015 செப்டெம்பர் 22 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

வடமாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கென்று, வடமாகாண சபை பிரதிநிதிகள் மற்றும் வேலையற்ற பட்டதாரிகள் ஆகியோரை உள்ளடக்கிய விசேட செயற்குழுவொன்று இன்று  செவ்வாய்க்கிழமை (22) வடமாகாண சபையால் உருவாக்கப்பட்டது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில இன்று செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்றபோதே, இந்த குழு உருவாக்கப்பட்டது.

வடமாகாணத்திலுள்ள வேலையில்லாப் பட்டதாரிகள் இணைந்து, வடமாகாண சபை வாயிலை மறித்து, நேற்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

இதன்போது, வடமாகாண அமர்வில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான தீர்க்கமான முடிவொன்றை எடுப்பதாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களால் வழங்கப்பட்ட உறுதியையடுத்து, சபை அமர்வுகளை ஆரம்பிக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் அனுமதி வழங்கியிருந்தனர்.

பின்னர், சபை அமர்வின் போது, வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்குவது தொடர்பில் விசேட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வடமாகாண போக்குவரத்து, வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் கொண்டு வந்த தீர்மானத்தை,  வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா வழிமொழிந்தார். அதன் பிரதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

அத்துடன், வடமாகாண பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு தொடர்பான விடயங்களைக் கையாள்வதற்கான உருவாக்கப்பட்ட விசேட செயலணியில், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன், உறுப்பினர்களான அயூப் அஸ்மின், அப்துல் றிப்கான், ச.சுகிர்தன், க.சர்வேஸ்வரன், த.லிங்கநாதன், எம்.அன்ரனி ஜெகநாதன், எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஆகியோரை வடமாகாண சபை பிரதிநிதிகளாகவும் வேலையற்ற பட்டதாரிகளின் 7 பேரும் அங்கம் வகிக்கின்றனர்.

இதன் இணைப்பாளராக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .