2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வடக்கு, கிழக்கு மாகாண கல்வி நிலை தொடர்பில் கவலை

Thipaan   / 2017 ஏப்ரல் 07 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஜெகநாதன்

தமிழ்பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த, சாதாரணதர பரீட்சையிலும்  மாகாண மட்டத்தில் கடைசி இடங்களில் உள்ளன. இது கவலையளிக்கும் விடயம் என, தமிழர் ஆசிரியர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2012ஆம் ஆண்டு முதல் வடக்கு மாகாணம் ஒன்பதாம் இடத்திலும், கிழக்கு மாகாணம் எட்டாம் இடத்திலும் கல்வியில் உள்ளமை பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நாம் அனைவரும் பொறுப்புக்கூறியே ஆக வேண்டும்.

பிள்ளைகளிலும், பெற்றோரிலும் யாரும் குறைசொல்ல முடியாது. யுத்தம் நடைபெற்ற காலங்களில் எந்தவித வசதி வாய்ப்புகளும் இல்லாத நிலையில் வடகிழக்கு மாகாணங்கள் கல்வியில் பின்னடைவுகளைச் சந்திக்கவில்லை. ஆனால் இன்று ஓரளவு வளங்கள் பகிர்தளிக்கப்பட்டு அச்சமில்லாத சூழ்நிலையில் கல்வியில் நாம் பின்னடைவைச் சந்திப்பது எமது மாகாணங்களின் கல்விப் பொறிமுறைகளில் பாரிய தவறுகள் இருப்பதாக நாம் கருதுகின்றோம்.

உலக நாடுகளின் பல்வேறுவிதமான ஆலோசனைகள், முளைவளங்கள், நிதிமூலங்கள் அனைத்தையும் பெற்றுக்கொண்டு முன்னேற்றமான நிலையை நோக்கி நாம் நகரவில்லை என்பது மிகுந்த வேதனையைத் தருகின்றது. இதனூடாக பல விடங்களை நாம் பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளோம்.

அவை எவற்றையும் எவரும் நடைமுறைப்படுத்துவதாக இல்லை. உதாரணமாக பாடசாலைகளின் தரங்களுக்கு ஏற்ப அதிபர்களை நியமனம் செய்யுங்கள் என பல தடவைகள் நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அத்தைகைய வேண்டுகோள்கள் வேண்டுமென்றே உதாசீனம் செய்யப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் ஒரே பாடசாலையில் பதினைந்து, இருபது ஆண்டுகள் தொடர்ச்சியாக பொருத்தமில்லாத அதிபர்கள் கடமையில் உள்ளனர். இதனை ஆளுநர் வரை கொண்டுசென்றும் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

ஒட்டு மொத்தத்தில் கல்வியில் அரசியல் தலையீடு எப்போது அற்றுப் போகின்றதோ அன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விடிவு ஏற்படும். எமது இத்தகைய கருத்துக்கூட விமர்சனத்திற்கு உட்படுத்தப்படும் அல்லது பழிவாங்கலுக்கு உள்ளாகும். தவிர அத்தகைய எண்ணங்களைக் கைவிட்டு ஆக்கபூர்வமான பொறிமுறைகளை உருவாக்காதவரை இதே நிலை தொடரும் எனகுறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .