Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2018 மே 26 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
“அனுமதி பெறப்படாமல் நிகழ்வை நடத்தியமைக்காக உத்தியோகத்தர்கள் வருத்தம் தெரிவிக்கும் பட்சத்தில், அதனை ஏற்று அவர்களை சேவையில் தொடர அனுமதிக்கவேண்டும். அதனைவிடுத்து ஹற்றன் நஷனல் வங்கியை தமிழர்கள் புறக்கணிக்கும் நிலைக்கு இந்த விவகாரத்தை வங்கியின் முகாமைத்துவம் விட்டுவைக்க கூடாது” என, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
ஹற்றன் நஷனல் வங்கியின் கிளிநொச்சி கிளையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை அனுஷ்டித்தமை தொடர்பில், தென்னிலங்கையில் ஏற்பட்ட கொந்தளிப்பையடுத்து, அந்த வங்கிக் கிளையின் உதவி முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர் ஒருவரும் முகாமைத்துவத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர்.
முகாமைத்துவத்தின் இந்தத் தீர்மானத்தைக் கண்டித்து சமூக ஊடகங்களில் கருத்துகள் வெளியிடப்படுகின்றன. அத்துடன் சிலர் தமது சேமிப்பு கணக்கை மூடியும் உள்ளனர்.
இதுதொடர்பில் கருத்து வெளியிடும் போதே வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் பாடசாலைகளிலே அரைக் கம்பத்தில் மாகாணக் கொடியை ஏற்றுமாறும் அலுவலகங்களிலே அஞ்சலியைச் செலுத்துமாறும் வடக்கு மாகாண சபையின் சார்பில் முதலமைச்சரும் கல்வி அமைச்சரும் கோரியிருந்தனர். அதனை ஏற்று பல இடங்களிலே அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேபோன்றுதான் ஹற்றன் நஷனல் வங்கியின் கிளிநொச்சி கிளையிலும் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.
“முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை செய்வதற்கு மக்களுக்கு உரிமை உண்டு என அமைச்சர் ராஜித சேனாரத்னவும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் கூறியிருந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக இராணுவத்தினர்கூட குளிர்பானங்களை வழங்கியிருந்தனர்.
“இந்தப் பின்னணியிலே நினைவேந்தலை கடைப்பிடித்த உத்தியோகத்தர்களை ஹற்றன் நஷனல் வங்கியின் முகாமைத்துவம் இடைநிறுத்தியுள்ளது. ஏனையோர் மீதும் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகச் சொல்கிறார்கள். அவ்வாறாயின் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியதையும் இவர்கள் அவமரியாதை செய்கிறார்களா? என்ற கேள்வி எழுகிறது.
“தேசிய வீரர்கள் தினத்தில் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொப்பி மலரை அணிந்திருந்தார். அதன்பின்னர்கூட மக்கள் வாக்களித்து அவரைத் தெரிவு செய்துள்ளனர். எனவே, எமது மக்களின் படுகொலையை நினைவேந்துவதை சிங்கள ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா? எனக் கேட்கத் தோன்றுகின்றது.
“தமிழர்களை பணிப்பாளர் சபையில் கொண்டிருக்க கூடிய ஹற்றன் நஷனல் வங்கி, இவ்வாறு நடந்து கொண்டுள்ளது வருத்தமளிக்கிறது. வங்கியின் இந்தச் செயற்பாட்டை அறிந்தவுடன் நூற்றுக் கணக்கானோர் தமது கணக்குகளை மூட ஆரம்பித்துள்ளனர். இந்த நிலை நல்லதொரு அறிகுறி இல்லை.
“இடைநிறுத்தப்பட்ட உத்தியோகத்தர்களின் வேலைக்கு ஆபத்து வருமாகவிருந்தால், வடக்கு - கிழக்கில் மாத்திரமல்ல தமிழ் மக்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் ஹற்றன் நஷனல் வங்கியை புறக்கணிக்கும் நிலைக்கு தள்ளவேண்டாம்.
“மக்கள் கொதிப்படைந்துள்ளார்கள். அதனால் வங்கிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கினால் அது வங்கியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும். எனவே, உத்தியோகத்தர்களின் இடைநிறுத்த உத்தரவை வங்கியின் முகாமைத்துவம் மீளப் பெறவேண்டும். இல்லையேல் தமிழ் மண்ணிலிருந்து ஹற்றன் நஷனல் வங்கி வெளியேறுகின்ற நிலமை உருவாகும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
11 minute ago
14 minute ago
19 minute ago