2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

‘விலைபோகாதவர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 31 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

இலங்கையை மையப்படுத்தி சமகாலத்தில் உருவாகியிருக்கும் பூகோள அரசியல் நலன்சார்ந்த போட்டி தன்மை தமிழ் மக்களுக்கு சாதகமானதும், பாதகமானதுமான விளைவுகளை உண்டாக்கியிருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தை தமிழ் மக்களுடைய நலன்களுக்காக பயன்படுத்தவேண்டும். மாறாக எங்களை எவரும் பாவித்துவிடக்கூடாது. மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து, தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று ,நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,

“இலங்கையை மையப்படுத்தி நடந்து கொண்டிருப்பது பூகோள அரசியல் நலன்சார்ந்த போட்டி என நாங்கள் படித்துப்படித்து கூறிக்கொண்டிருந்தோம். 2009ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய காலம் தொடக்கம் நாங்கள் அதனை கூறிவந்தோம். ஆனால் நாங்கள் கூறும்போதெல்லாம் சிரித்தார்கள். எங்களை பார்த்து நகைத்தார்கள்.

“ஆனால், நாங்கள் கூறியது அப்பட்டமான உண்மை என்பதை இன்று நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் காட்டியிருக்கின்றன. குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷவை சீனா சந்திக்கின்றது. மறுபக்கம் ரணில் விக்கிரமசிங்கவை மேற்கு நாடுகள் சந்திக்கின்றன. இவ்வாறு சமகாலத்தில் பூகோள அரசியல் நலன்சார் போட்டி உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில் எங்களுடைய நலன்களை பெற்றுக் கொள்வதற்கான அல்லது எங்களுடைய நலன்களை வென்றெடுப்பதற்கான சாத்தியங்களும் அதிகளவில் காணப்படுகின்றன.

“அதற்காக தமிழ்த் தேசம் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். இன்றுள்ள பூகோள நலன்சார் போட்டியை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவேண்டுமே தவிர எங்களை எவரும் பாவிக்கும் வகையில் நடந்து கொள்ளகூடாது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பி பயனில்லை.

“தமிழ்தேசிய கூட்டமைப்பு ஏற்கெனவே தமிழ் மக்களை நடுத்தெருவில் கொண்டுவந்து விட்டிருக்கின்றது. தமிழ் மக்கள் இன்று சம்பந்தன், சுமந்திரனை தேடி செல்வதற்கு தயாராக இல்லை. காரணம், அவர்கள் இந்த பூகோள அரசியல் போட்டியாளர்களின் கைபொம்மையாக மாறியிருக்கின்றார்கள். அவர்கள் மேற்கு நாடுகளின் நலன்களுக்காக இந்த அரசாங்கத்தை பாதுகாத்திருக்கின்றார்கள்.

“ஆகவே, இன்றுள்ள பூகோள அரசியல் போட்டி தன்மையை தமிழ் மக்களுடைய நலன்களுக்காக பயன்படுத்த கூடிய தரப்புகளின் இடம் காலியாகவே உள்ளது. அந்த இடத்தை நிரப்பி தமிழ் மக்களுடைய நலன்சார்ந்த விடயத்தில் மிக இறுக்கமான நிலைப்பாட்டை கொண்டு இயங்க கூடிய தரப்புக்களாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் மட்டுமே இருக்கின்றோம்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போதும் கூட பொறுப்புகூறலை நடைமுறைப்படுத்தினால், புதிய அரசியலமைப்பை உருவாக்கினால் யாருக்கும் ஆதரவு கொடுப்போம் என கூறுகிறது. பொறுப்புகூறல் விடயத்தில் உள்ளக விசாரணை வலியுறுத்தப்படுகின்றது. புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி வலியுறுத்தப்படுகின்றது. பின்னர் இதனை நிறைவேற்றுவதால் என்ன பயன்?

“ஆகவே, மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். தமிழ் மக்களுடைய நிலைப்பாடுகளில் மிகவும் இறுக்கமாக இருப்பதுடன், விலைபோகாதவர்களை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .