2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

‘வெளியில் இருந்து கொண்டுவந்து வெற்றிடங்களை நிரப்புகின்றோம்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 19 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தகுந்த தமிழில் பேசும் தாதிகள் இல்லாததால், நாம் மாகாணத்துக்கு வெளியில் இருந்து தாதியரை அழைத்து வந்து வெற்றிடங்களை நிரப்புகின்றோமென, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வாரத்துக்கொரு கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

     01 கேள்வி – வடக்கு மாகாணசபைக்குட்பட்ட பாடசாலைகள் தவிர்ந்த அமைச்சுகள் திணைக்களங்களில் 7510 அங்கீகரிக்கப்பட்ட பதவி வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் ஆண்டுகளாக இவற்றை நிரப்ப முடியாதது ஏன்?

பதில் - மொத்தம் 6,338 வெற்றிடங்கள் இருப்பதாகத் தெரியவருகின்றது. அவற்றுள் மத்திய அரசாங்கத்தால் நிரப்பப்பட வேண்டிய வெற்றிடங்கள் 3,329. மாகாண அரசாங்கத்தால் நிரப்பப்பட வேண்டியவை 3009.

இந்த வெற்றிடங்கள் காலத்துக்குக் காலம் ஏற்படுகின்றன. இளைப்பாறல்கள், இடமாற்றங்கள், பதவி விலகல்கள், இறப்புகள் எனப் பல காரணங்களால் இந்த வெற்றிடங்கள் ஏற்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட தினத்தில் வெற்றிடங்கள் உருவாவதில்லை. நாளாந்தம் இவை மாறிக்கொண்டேயிருப்பன. ஒவ்வொரு சேவையிலும் கணிசமான அளவு வெற்றிடங்கள் ஏற்பட்ட பின்னரே சேவைப் பிரமாணக் குறிப்பின் பிரகாரம் ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பல வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டும் தகைமையுடையோர் முன்னிலையாகாத சந்தர்ப்பங்கள் உள்ளன. தற்போது எம்மால் நிரப்பப்பட வேண்டியவை 3,009. ஆனால் புதிதாக நேற்று நியமனம் கொடுக்கப்பட்டவர்களும் அந்தத் தொகையினுள் அடங்குகின்றனர்.

தவணைக்குத் தவணை நாம் கொடுத்துவந்து கொண்டிருக்கின்ற நியமனங்கள் பற்றிய முழு விவரங்களையும் கோரியுள்ளேன். அவை கிடைத்ததும் உங்களுக்குத் தெரியப்படுத்துவேன்.

மாகாணசபையின் நிர்வாகத்தில் இருக்கும் பதவிகள் அனைத்தினது தொகை 40,422. இவ்வளவு ஆளணியும் மத்திய அரசாங்கத்தாலும் மாகாண அரசாங்கத்தாலும் நிரப்பப்படுகின்றன. மாகாண அரசாங்த்தால் நிரப்பப்பட வேண்டிய ஆளணியில் 31.07.2018 அன்று வெற்றிடமாக நிரப்பப்படவேண்டிய ஆளணியினர் 3,009. இது 7.4 சதவீதம் ஆகும் என்றார்.

 

 

2.    கேள்வி - வடக்கில் பல ஆயிரக்கணகக்கில் இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்பற்றிருக்கும் நிலையில், இவ்வாறு பெருந்தொகையான பதவி வெற்றிடங்கள் காணப்படுகின்றமையால் தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு வடக்கு மாகாணசபை அநீதி இழைத்துள்ளதே?

பதில் - பதவி வெற்றிடங்கள் என்பது ஒரு நிலை. வேலைவாய்ப்பற்றவர்கள் என்பது பிறிதொரு நிலை. இரண்டையும் சேர்த்து எம்மைக் குறை கூறாதீர்கள். அதாவது குறிப்பிட்ட பதவி வெற்றிடங்களுக்கு வேலைவாய்ப்பற்றவர்கள் தகைமை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

பல வெற்றிடங்களை நிரப்பத் போதுமான தகைமை உடையவர்கள் இல்லை என்பதை மனதில் கொள்ளுங்கள். இது கல்வித் தேர்ச்சியில் உயர் நிலை அடைந்தவர்களுக்கும் பொருந்தும். கல்வி நிலையில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கும் பொருந்தும். பல்கலைக்கழகம் வரையில் இலவசக் கல்வி பெற்று உயர் நிலையை அடையும் எம்முள் பலர் வெளிநாடுகளுக்குச் செல்வது உங்களுக்குத் தெரியும்.

அவர்களால் நிரப்பக்கூடிய வெற்றிடங்களும் எமது வெற்றிடப் பட்டியலில் இருப்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இல்லாததால் குறிப்பிட்ட வெற்றிடங்களை நிரப்ப முடியாதிருக்கின்றது. அதே போல் தொழிற்கல்வி கற்று சில தொழில்களில் தேர்ச்சி பெற்ற பலர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைகள் தேடிச் செல்வதால் இங்கு ஏற்படும் வெற்றிடங்கள் பல தொடர்ந்து நிரப்பப்படாது இருப்பதையும் நீங்கள் உணர வேண்டும். தொழில்த்திறன், உள்ளவர்கள் இல்லாததால் வடமாகாணம் படும் அவஸ்தையை நீங்கள் உணர வேண்டும். தாதிகளுக்கு வெற்றிடம் உண்டு.

தகுந்த தமிழில் பேசும் தாதிகள் இல்லாததால் நாம் மாகாணத்துக்கு வெளியில் இருந்து தாதியரை அழைத்து வந்து வெற்றிடங்களை நிரப்புகின்றோம். நிரப்பிய பின்னரும் வெற்றிடங்கள் பல உள்ளன. நீங்கள் கூறும் வேலையற்றவர்களை நாம் தாதியர்களாக நியமிக்கலாமா? அவர்களுக்கு அரசாங்கம் எதிர்பார்க்கும் தகைமை இருக்க வேண்டும். தமிழ் இளைஞர் - யுவதிகளுக்கு வடக்கு மாகாணசபை அநீதி இழைத்துள்ளதா அல்லது வடக்கு மாகாணசபைக்குத் தமிழ் இளைஞர் யுவதிகள் அநீதி இழைத்துள்ளார்களா? இலகுப் பாடங்களைப் படித்துப் பட்டம் பெற்ற பட்டதாரிகள் பலர் வேலைவாய்ப்பின்றி இருப்பது அவர்கள் எமது வெற்றிடங்கள் பலவற்றை நிரப்பத் தகுதி இல்லாததன் காரணத்தால். இதனால்தான் எமது தேவைகளுக்கு ஏற்பவும் கல்வி புகட்டப்பட வேண்டும் என்று கூறி வருகின்றோம் என்றார்.

3.    கேள்வி – வடக்கில் வேலைவாய்ப்புகளை வழங்கும் சந்தர்ப்பம் இருந்தும் அவற்றைச் சரியாகப் பயன்படுத்த வடக்கு மாகாணசபை தவறியுள்ளமை வடக்கு மாகாணசபையின் செயற்றிறன் அற்ற செயற்பாடாக கருத முடியாதா?

பதில் - முன்னைய கேள்விகளுக்கு நாம் கூறிய காரணங்கள் உங்களுக்கு எமது இடர் நிலையையும் இக்கட்டான நிலையையும் உணர்த்தி இருக்கும். எமது வடமாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் போன்றவர்கள் தான் இவ்வாறான குற்றங்களை முன்வைத்து வருகின்றனர். அடுத்த தேர்தலுக்கான முனகல்கள் இவை. முன்பும் வெற்றிடங்கள் இருந்தன. இவர்களோ நீங்களோ கேட்கவில்லை. திடீரென்று பதவி முடியும் காலத்தில்  இவற்றை எழுப்பக் காரணம் என்ன? வாசகர்கள் பதில் அறிவார்கள்.

வேலைவாய்ப்புக்களை வழங்க இருக்கும் சந்தர்ப்பங்களை நாம் சரியாகப் பயன்படுத்தவில்லை என்பது தவறான கருத்து. நாம் காலத்துக்குக் காலம் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கைகளை எடுத்தே வருகின்றோம். அதில் பல சிக்கல்கள், தடைகள் எமக்கிருக்கின்றன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் இன்னமும் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தின் கீழ்த்தான் பதவி வகித்து வருகின்றோம் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .