2025 மே 06, செவ்வாய்க்கிழமை

'கல்வியின் நோக்கத்தை உணர்ந்து கற்க வேண்டும்'

Niroshini   / 2016 ஜூலை 04 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

“நமது எதிர்கால இலட்சியங்களும் நாம் தெரிவு செய்யும் துறைகளும் ஒன்றுக்கொன்று பொருந்தி நேர்கோட்டில் பயணித்தால் மட்டுமே எமது எதிர்கால இலக்கினை இலகுவில் அடைந்து கொள்ள முடியும்" என புத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தின் தலைவரும் அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபையின் முன்னாள் பொதுச்செயலாளருமான அஷ்ஷெய்க் எச். அப்துல் நாசர் (ரஹ்மானி) தெரிவித்தார்.

உயர்தர மாணவர்களின் எதிர்கால அடைவுகளை மேம்படுத்தும் நோக்கில் புத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தின் ஒன்பதாவது இப்தார் நிகழ்வுடன் கூடிய இந்த விழிப்பூட்டும் செயலமர்வு, சனிக்கிழமை (02) மாலை புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள  தாய் சேய் சிகிச்சை நிலையத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

“உயர் தரத்தில் கல்வி பயிலும் எமது அறிவு, எமது ஒழுக்கம் எந்த நிலையில் உள்ளது என நாமே முதலில் எமக்குள் படம் போட்டு பார்க்க வேண்டும். நேற்றைய நாளாக அல்லது நேற்றைய ஆளாக இன்று நாம் இருக்க முடியாது. இன்றைய புதிய நாளில் நாமும் புதியவராக மாற வேண்டும்.

கல்வி என்பது ஆசிரியர்களிடம் இருந்து பெற்றுக்கொள்வதாகும் என நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். அதே போன்று தகவல்களை ஆசிரியர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு திறமைகளை தனக்குள் சரியான முறையில் உண்டாக்கி கொள்பவனே சிறந்த மாணவனாக  கருதப்படுகிறான். மாணவர்களுக்கு தகவல்களை கொடுப்பது மாணவர்களின் திறமைகளை இனங்கண்டு அவற்றினை உருவாக்கி கொடுப்பது ஆசிரியர்களின் கடமையாக உள்ளது.

நூல்களை தனியாக ஆசிரியர்களாக்கி கொண்டால் ஒருவேளை நாம் வழி தவறி போகலாம். மாணவர்களாகிய நாம் எமக்காவே படிக்கின்றோம் என்ற உணர்வினை முதலில் மனதில் கொள்ள வேண்டும்.

மாணவர் பருவத்தில் நாம் கல்வி கற்கும் முக்கிய நோக்கம் யாதெனில் கல்வியை பெறுவதன் மூலம் இறைவனை இறைவனின் படைப்புகளை இறைவனுக்கும் படைப்புகளுக்கும் உள்ள தொடர்பாடல்கள்  போன்றவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். இதுவே நாம் கல்வி கற்பதற்கான மிக முக்கிய  நோக்கமாக அமைந்துள்ளது.

நாம் எதிர்காலத்தில் தெரிவு செய்கின்ற பல்வேறு பட்ட துறைகளின் மூலமாக நாம் இறைவனை காண முடியாவிட்டால் நாம் கற்ற கல்வி ஒருபோதும் பயன் தர போவதில்லை. குழம்பி போயுள்ள இந்த உலகில் எமது எதிர்கால இலட்சியங்களும் குழம்பி போயுள்ளன.  நம்மிடமிருந்து விடைபெற்று சென்ற நாட்களை எண்ணி கவலைப்படாமல் புதியதோர் உலகை ஆள நாம் புறப்படுவோம்” என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X