2025 மே 22, வியாழக்கிழமை

பலமான இந்த அரசாங்கத்தை பலவீனப்படுத்த விரும்பவில்லை: அமைச்சர் ஹக்கீம்

Super User   / 2013 ஜனவரி 21 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


நாட்டில் முஸ்லிம் விரோத நடவடிக்கை மேலும் கட்டுமீறிச்செல்ல அனுமதித்தால் அது அரசாங்கத்திற்கு நல்லதல்ல. பலமான இந்த அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை பலவீனப்படுவதற்கு நான் விரும்பவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இனவாதத்தை தூண்டுவதன் மூலம் அரசாங்கத்தை பலவீனப்படுத்த எத்தனிக்கும் அத்தகைய சக்திகளுக்கு எந்த வெளிச்சக்திகளிடமிருந்து உதவியும் ஒத்தாசையும் கிடைக்கின்றன என்பதை கண்டுகொள்ள முடியாத ஒரு புலனாய்வு துறையா இங்கு இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட பேராளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம்,

"இந்த நாட்டில் கொழுந்து விட்டு எரிகின்ற ஒரு பெரிய பிரச்சினைக்குள் நாங்கள் மாட்டிக்கொண்டிருக்கின்ற நிலையில் இந்த பிரச்சினையை முஸ்லிம் காங்கிரஸின் தலைமை எவ்வாறு அணுகப் போகிறது என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் உள்வீட்டு சில்லறை பிரச்சினைகளைப் பற்றி அலட்டிக்கொள்ளாது  முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தியாக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இன்றுள்ள சூழலில் முஸ்லிம் காங்கிரஸ் இந்த அரசாங்கத்தோடு இருப்பதையே விமர்சனப் பார்வையோடு நோக்குகின்றனர்.

பத்திரிகைகளில் அவ்வாறான கட்டுரைகள் வெளிவந்த வண்ணம் இருப்பதைக் காணலாம். முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் ஒருவிதமான மௌன விரதத்தை அனுஷ்ட்டித்துக் கொண்டிருப்பதாக விமர்சனைக்கு உள்ளாகியிருக்கின்றது.

இந்த சமூகத்தின் பிரச்சினைகளுக்கு முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் உரிய தீர்வுகளைக் காண வேண்டும் என்று ஆதங்கத்தையும் ஆவேசத்தையும் நாட்டின் எல்லா மூலை முடுக்குகளிலும் வாழ்கின்ற முஸ்லிம்கள் வெளிப்படுத்துகின்ற காலத்தில் தான் நாங்கள் இருக்கிறோம்.

முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தின் வீரியம் சம்பந்தமாக நிறைய கேள்விகளை தொடுக்கின்றார்கள். இந்த இயக்கத்தின் நோக்கம் என்ன? இது அரசியல் பிரதிநிதிகளை உற்பத்தி செய்து உருவாக்குகின்ற வெறும் தொழிற்சாலையா எனக் கேட்கிறார்கள்.

இந்தக் கட்சியில் இருந்து மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்படுபவர்களை சூறையாடிக்கொள்கிறார்கள். கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டு அவ்வாறு அமைச்சுப் பதவிகளுக்கு சோரம் போனவொரு கூட்டம் இருக்கிறது. இந்தக் கட்சியினுடைய அரசியல் பலம் முக்கியம் வாய்ந்தது. ஆனால் இந்தக் கட்சியின் மீது ஒரு சந்தேகப் பார்வை நிலவத்தான் செய்கிறது.

வேறு கட்சியிலிருந்து வந்து மீண்டும் அடுத்த தேர்தலில் மாறி விடுவார்களா என்ற ஒரு சந்தேகம் இல்லாமல் இல்லை. இந்த நம்பிக்கை இடைவெளியினால் அதிகமாக சங்கடப்படுபவர்களாக நானும் எனது செயலாளர் நாயகமும் இருக்கிறோம். ஏனென்றால் எங்களது கட்சியின் ஒவ்வொரு அரசியல் உயர்பீட கூட்டத்திலும் இந்தப் பிரச்சினை பூதாகரமாக வெடிப்பதுண்டு.

பிரச்சினைகளை கையாள்வதில் எங்களுக்குள்ளே தடுமாற்றம் இருக்கிறதா என்றும் யோசிக்கிறார்கள். தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்திற்குப் பிறகு எத்தனையோ விடயங்கள் நடந்தாகிவிட்டன. குருநாகல் நகருக்கு அண்மையிலும் அவ்வாறானதொரு பிரச்சினையை ஏற்படுத்தினார்கள். அது பற்றி நாங்கள் பாதுகாப்புச் செயலாளருடன் கதைத்தோம். போதாக்குறைக்கு பலசேனா என்ற ஒன்று இப்பொழுது பல இடங்களில் கலாட்டாவில் ஈடுபட்டுள்ளது.

மஹரகமயில் ஒரு நவீன ஆடை விற்பனை நிலையத்தின் மீது ஆர்ப்பாட்டம் தொடுக்கப்பட்;டது. ஹலால் சான்றிதழுக்கும் புடைவை விற்பனை நிலையத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இது முழங்காலுக்கும், மொட்டைத் தலைக்கும் முடிச்சுப்போடுகின்ற முயற்சியாகும்.

இன ரீதியான பிரச்சினைகளை எதுவுமே அறியாத அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் கட்டவிழ்த்து விடுகிறார்கள். அவர்களுக்கு மத்தியில் முஸ்லிம்கள் பற்றிய விஷமத்தனமான கருத்துகளை பரப்பும் இயக்கத்தினர் பயம் பீதி எதுவுமின்றி அவ்வாறான முயற்சிகளில் துணிச்சலுடன் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஒரு ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கிறது. ஏனெனில், அரசியலமைப்பில் கருத்துச் சுதந்திரம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சிந்தனைச் சுதந்திரம், சமய வழிபாட்டுச் சுதந்திரம், ஆர்பாட்டம் செய்வதற்கான உரிமை என்பன எல்லோருக்கும் உள்ளது.

ஆனால், இப்பொழுது நடக்கும் விடயங்களை அரசாங்கம் பொறுப்போடு கையாள வேண்டும். இன்னொரு சமூகத்தோடு மோதலை உருவாக்குவதற்கு வலிந்து சண்டையை வரவழைப்பதற்கு மேற்கொள்ளப்படும் இந்த விஷமத்தனமான விடயங்களை கருத்துச் சுதந்திரம் சிந்தனை சுதந்திரம் என்பவற்றின் பெயரில் செய்வதற்கு தடை விதிப்பதற்கு அரசியல் அமைப்பிலேயே அரசாங்கத்திற்கு இடம் இருக்கிறது.

அதை செய்யாது, இவற்றை வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பது முஸ்லிம்கள் மத்தியில் ஒரு பெரும் சந்தேகத்தை உருவாக்கியிருக்கிறது. இதன் பின்னணியில் உள்ள சக்திகளுக்கு ஏதாவது ஒத்தாசை வழங்கப்படுகிறதா என மக்கள் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

30 வருடமாக நீடித்த யுத்தத்தை வென்ற ஜனாதிபதிக்கு சமாதானத்தை ஏற்படுத்த எத்தனையோ உயிர்களை பறிகொடுத்து பெற்ற வெற்றியின் பின்னர் மீண்டும் இன்னுமொரு பாரிய அனர்த்தத்திற்கு வழிகோலுவதற்கு இடமளிப்பதா என்பதுதான் இன்று எழுந்துள்ள கேள்வி.

பலவீனமானவர்களை பாதுகாக்க முடியாத அரசாங்கம் ஓர் அரசாங்கமே அல்ல என நான் முன்னரே விமர்சித்திருக்கிறேன்.  இவ்வாறான சந்தர்ப்பத்தில் அதே கேள்வியை மீண்டும் எழுப்ப வேண்டிய நிலைமைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம்.

இனி மேலும் சகித்துக்கொண்டிருக்க முடியாத அளவுக்கு மனிதனுடைய மதிநுட்பத்தை அவமதிக்கின்ற ஒரு கூட்டம் இடத்திற்கு இடம் பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. நாளையே இந்த நாட்டை முஸ்லிம்கள் ஆக்கிரமிக்கப் போகிறார்கள் என்ற தோரணையில் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

முஸ்லிம்களை வந்தான் வரத்தான்களாகவும் கள்ளத் தோணிகளாகவும் சித்திரிக்கின்ற ஒரு போக்கை நாங்கள் காண்கிறோம். இப்பொழுது அது கட்டுப்பாட்டை மீறியிருக்கிறது.  1914 இல் ஒரு கலவரம் மூண்டபோது அதன் உண்மையான அடிப்படை முஸ்லிம்களுக்கு இருந்த வியாபார மேலாதிக்கம் என்று கூறப்பட்டது.

முஸ்லிம்களின் பொருளாதாரத்தை முடக்க வேண்டும் என்பதற்காக கரையோர சிங்களவர்கள் தோற்றுவித்த ஒன்றாக அது நோக்கப்பட்டது. அது தொடர்பாக சேர். பொன்னம்பலம் இராமநாதன் லண்டன் வைட் ஹோலில் இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகத்திற்கு சார்பாக பேசினார் என்ற விடயத்தை பற்றி ஓர் அறிக்கை இருக்கிறது.

அன்றைய ஆங்கில அரசாங்கம் அந்த கலவரத்தை அடக்குவதற்கு தனது முழு பலத்தையும் பிரயோகித்தது. எத்தனையோ கலகக்காரர்கள் சிறையில் அடைக்கப்பட்டதோடு கொலையும் செய்யப்பட்டார்கள்.அப்போது கூடிய அதிகாரத்தை ஆங்கில அரசாங்கம் பிரயோகித்தது என்பது இன்னும் ஒரு வடுவாக இருக்கிறது.

அன்று ஆரம்பித்த எதிர்ப்பு முஸ்லிம்களின் பொருளாதார  ஆதிக்கத்தின் மீது இன்றும் மேற்கொள்ளப்படுகிறது. உண்மையில் பெரும்பாலான முஸ்லிம்கள் வறுமையின் கீழ் வாழ்கிறார்கள் என்பது தெரியாத விஷயமல்ல. வேறெந்த சமயத்திலும் இல்லாத சகிப்புத் தன்மை இஸ்லாத்தின் உண்டு. அந்த சகிப்புத் தன்மையின் காரணமாகத்தான் இஸ்லாம் உலகளாவ வளர்ந்திருக்கிறது. அந்த உச்சக் கட்ட சகிப்புத் தன்மையோடுதான் நாங்கள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கின்றோம்.

இந்த முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கை ஒழித்து மறைத்து செய்யப்படுவது அல்ல, பகிரங்கமாகவே மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறிருக்க, தொடர்ந்து பொறுப்புவாய்ந்த அரசாங்கம் இந்த விடயத்தில் ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்காமல் இருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் பொலிஸார் என்ன செய்கிறார்கள். புலனாய்வுத் துறை என்ன செய்கிறது? எங்கள் மத்தியில் உள்ள நம்பிக்கை இடைவெளி காரணமாகவே ஆவேசப்படாது பொறுமை காத்தோம்.
மதிநுட்பத்தோடு சில விடயங்களை அணுக வேண்டும் என்பதால் அவ்வாறு பொறுமை காத்தோம். ஒரு தவறான நேரத்தில் பேசி நாட்டுக்கோ நாட்டுத் தலைமைக்கோ சர்வதேச ரீதியாக அபகீர்த்தி ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை.

ஏனெனில், இந்த நாட்டின் அரசாங்கத்திற்கு எதிராக ஜெனீவாவில் முயற்சி மேற்கொள்ளப்பட்ட பொழுது அரசை பாதுகாப்பதற்காக நாங்கள் அரபு நாடுகளுக்குச் சென்று ஆதரவு திரட்டினோம். அதற்கு உரிய கைமாறு இதுதானா என்ற அடிப்படையில் நாங்கள் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறோம்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்போடு சேர்ந்து கிழக்கில் நாங்கள் ஆட்சியமைக்க முன்வரவில்லை என்ற ஒரு விடயம் பற்றி கூறப்படுகின்றது. சேதமற்ற ஒரு விட்டுக்கொடுப்பை சமூகத்தின் நலனை முன்னிலைப்படுத்தி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

சேதாரமில்லாத ஒரு விட்டுக்கொடுப்பைச் செய்து இந்த இயக்கத்தை அழியவிடாது பாதுகாத்திருக்கிறோம். அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுத்திருக்கும் எமக்கு ஒரு பெறுமானம் வேண்டும் அல்லவா?  அது ஒரு கனதி இருக்க வேண்டும் அல்லவா?

இத்தகைய சந்தர்ப்பத்தில் அதனை பிரயோகிக்க வேண்டிய கட்டத்தில் நாங்கள் உள்ளோம். அமைச்சர் பௌசியுடைய இல்லத்தில் ஒன்றுகூடி நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் நாளை பேசப்போகிறோம். ஆனால் மூடிய அறைக்குள் பேசிப் பேசி எதைச் சாதிக்கப் போகிறோம் என்ற கேள்வி எழுவதும் இயல்பானதே. இப்பொழுது வெளிப்படையாகவே பேசியாக வேண்டிய கட்டத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம்.

இதை விடவும் காட்டமாக பேச முடியும். ஆனால் நிதானத்தை இழக்க விரும்பவில்லை. இத்தகையை முஸ்லிம் விரோத நடவடிக்கை இன்னும் கட்டு மீறிச்செல்ல அனுமதித்தால் அது அரசாங்கத்திற்கு நல்லதல்ல. இந்த அரசாங்கம் ஸ்திரத்தன்மையை இழந்து பலவீனப்படுவதற்கு இடமளிக்க நான் விரும்பவில்லை.

ஏனென்றால், அரசாங்கத்தைப் பலவீனப்படுத்த இந்த சக்திகள் முயல்கின்றன. எங்கிருந்து, எந்த வெளிச்சக்திகளிடமிருந்து இந்த சக்திகளுக்கு உதவியும் ஒத்தாசையும் கிடைக்கின்றன என்பதை கண்டுகொள்ள முடியாத ஒரு புலனாய்வுத் துறையா இங்கு இருக்கிறது? அவ்வாறானால் எங்களது புலனாய்வுத் துறை எதற்காக இருக்கிறது?

30 வருடங்கள் நீடித்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் தடுமாறிய ஒரு நிலையில் மூன்று வருடங்களுக்குள் அதனை முடித்து வைத்த இந்த ஜனாதிபதிக்கு ஒத்துழைத்த இராணுவ புலனாய்வுத் துறையும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவும் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கின்றன என மக்கள் கேட்க தலைப்பட்டிருக்கிறார்கள்.

ஜனநாயக உரிமையையும் கருத்துச் சுதந்திரத்தையும் பயன்படுத்தி விசமத்தனமாக  இனக்கலவரத்தை ஏற்படுத்த எத்தனிக்கும் சக்திகளின் பின்னணியில் செயல்படும் வெளிச்சக்திகளை கண்டுபிடித்து கட்டுப்படுத்த ஏன் முடியாது என்று மக்கள் கேட்கிறார்கள். இந்த நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கில் இருந்தும் இந்த கேள்வி எழுகின்றது.

இதைவிட காணிப் பிரச்சினையை குறிப்பாக வடக்கு கிழக்கில் பூதாகரமாக உருவெடுத்திருக்கின்றது. அதனை நிதானமாக கையாள வேண்டியிருக்கின்றது. சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த மாதிரி எங்களிடம் இருந்து பிரிந்து சென்ற சிலர் அதனை தங்களுக்கு புள்ளிகளை போட்டுக்கொள்வதற்காக அதனைச் சிக்கலாக்கி இருக்கிறார்கள்.

அது ஒரு புறம் இருக்க புதிய உள்ளுராட்சி தேர்தல் நடைமுறை சிறுபான்மை கட்சிகளினதும், சிறிய கட்சிகளினதும் பிரதிநிதித்துவத்தை குறிப்பாக வடக்கு கிழக்கிற்கு வெளியே கேள்விக்குறியாக்கி இருக்கிறது. மிகவும் சமயோசிதமாக நடந்துகொண்டு அவற்றில் எமது பிரதிநிதித்துவத்தை எவ்வாறு கூட்டிக்கொள்ளலாம் என்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றில் குருநாகல் மாவட்டத்தின் மாறி மாறி வந்த மாகாண சபைத் தேர்தல்களில் உறுப்பினர்கள் இருவரை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வதில் நாங்கள் வெற்றி கண்டிருக்கிறோம். இதனால் இந்த மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸிற்கு தனியான முகவரியை எங்களால் பெற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது.

முரண்பாடுகள் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றன. அதனை முற்றாக இல்லாமல் செய்துவிட முடியாது. விமர்சனங்கள் வேண்டும், அத்தகைய விமர்சனங்கள் திறந்த தன்மை கொண்டனவாகவும் இருக்க வேண்டும். தலைமைத்துவத்திற்கு இருக்க வேண்டிய முக்கிய அம்சம் விமர்சனங்களை ஜீரணிக்க கூடிய தன்மையாகும்' என்றார்.

இந்த நிகழ்வில் கட்சி செயலாளர் ஹசன் அலி, வடமேல் மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா, தொழிலதிபர் தஸ்லீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0

  • meenavan Monday, 21 January 2013 01:27 PM

    நீங்கள் அரசை பலவீனப்படுத்த விரும்பவில்லை என்பதன்........? உங்களது நிலைமை பரமசிவன் கழுத்து கருடன் என்றால் மிக பொருந்தும்.

    Reply : 0       0

    aj Monday, 21 January 2013 01:38 PM

    ஹஹஹஹஹஹ‌...
    சாபஷ் ஹக்கிம் அவர்கல். இப்படி தான் இருக்கனும்.

    Reply : 0       0

    meenavan Monday, 21 January 2013 01:48 PM

    வெளி சக்திகளிடமிருந்து, ஒத்தாசை பெறும் சக்திகளை அறியமுடியாத புலனாய்வு எதற்கு என்று நீங்கள் கேட்டாலும், அவர்கள் ஏற்கனவே நீதி சேவை ஆணைக்குழுவின் செயலாளரை தாக்கியவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை என்று கைவிரித்ததிலிருந்து(தமிழ் மிரர் ஜன.21.2013) இதன் பின்புலம் யார் என்பதை சாதாரண பொதுமகன் அறிந்து வைத்துள்ளான், நீதி அமைச்சர் உங்களால் அறிய இயலாமைக்கு உங்களது தீக்கோழி நிலைப்பாடே காரணம்.

    Reply : 0       0

    அக்கையூர் முல்லா Monday, 21 January 2013 02:53 PM

    தேர்தல் மேடையில் முஸ்லிம்களின் அபிலாஷை வென்றெடுக்க வேண்டும், இந்த அரசுக்கு முஸ்லிம்களின் பலத்தை காட்ட வேண்டும் என்று கொக்கரித்துவிட்டு இப்போது அரசின் பலம் குறைக்க தயாரில்லை என்றால் என்ன பொருள்.
    அமைச்சர். ஹக்கீம் அவர்களே அரசிடம் கேட்க வேண்டிய கேள்விகளை மக்களிடம் கேட்காதிர். கேட்க வேண்டிய இடத்தில் கேளுங்கள். அரசியல் அமைப்பில் கருத்துச்சுதந்திரம் இருப்பது அனைவருக்கும் தெரியும். அதை நீங்கள் பாராளுமன்றத்தில் பாவிக்கலமே..! நீங்கள் எதை சொல்ல வருகிறீர்? உங்கள் நோக்கம் என்ன? இந்த பிரச்சினையை எவ்வாறு ஒரு பாராளுமன்ற உருப்பினராக, அரசின் பங்காளியாக கையாளப்போகிறீர், என விளக்குவதை விட்டு விட்டு எங்களிடம் கேள்வி கேட்கிறீர். நீங்கள் குருநாகல் மாவட்டத்தில் வந்த 2 தேர்தலில் 2 உறுப்பினரை தக்க வைத்தது பெரிய விடையமல்ல. எம் சமூகத்திற்காக என்ன செய்தீர் என்பதுதான் மக்களிடம் நிலவும் கேள்வி ...! தயவு செய்து வாக்களித்த மக்களை முட்டாளாக்கும் வேலையில் ஈடுபடாதிர்.
    பிட்டு விழுங்கிய பூனை போல் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திண்டாடுவது நன்றாக விளங்குகிறது...

    Reply : 0       0

    avathanee Monday, 21 January 2013 04:47 PM

    தீயாதோர் உறவு தீங்குதான்.. இது எப்போது அமைச்சருக்கு விளங்கபோகிறதோ.. வரும் முன் காப்பதே புத்திசாலித்தனம்.. வரும்போதாவது புரியா விட்டால் அதுதான் மடமை..

    Reply : 0       0

    K.Balendran Monday, 21 January 2013 04:58 PM

    இந்த ஆள் எப்ப கவுண்டமணியாய் மாறினார்?

    Reply : 0       0

    MADURANKULI KURANKAR Monday, 21 January 2013 05:38 PM

    நீங்க எல்லாம்.............................????!!!!!

    Reply : 0       0

    Kuruvi Monday, 21 January 2013 06:31 PM

    ஹாலோ சார், நீங்கள் எவ்வளவுதான் கதைத்தாலும் ஒன்றுமே நடக்காது..!! றூட்ட மாத்துங்கள்..! உங்களது எதிர்பை தெரிவியுங்கள்..! அப்படி உங்களாள் முடியாது விட்டால் ஒதுங்கிக் கொள்ளுங்கள்..! திறமை உள்ள நிறைய பேர் கட்சியில் உள்ளனர், அவர்கள் முன்னெடுத்து செல்வார்கள்

    Reply : 0       0

    Kanavaan Tuesday, 22 January 2013 02:18 AM

    முஸ்லிம் காங்கிரஸின் முகவரியைத் தக்க வைத்துக்கொள்வது முஸ்லிம் வாக்காளர்களை வைத்து மொத்த வியாபாரம் செய்வதற்காகவா என்ன? முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகளை அறிந்துதானே உங்களது கட்சி திவிநெகும சட்ட மூலத்திற்கு ஆதரவாகக் கிழக்கு மாகாண சபையிலும், பாராளுமன்றத்திலும் வாக்களித்தது. இஸ்லாத்திலுள்ள உச்சக்கட்டப் பொறுமையோடுதான் முஸ்லிம்கள் வாக்காளர்கள் உங்களை விரட்டியடிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு என்பதையும், கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்குத்தான் என்பதனையும் நீங்கள் மறக்காமல் இருப்பதுதான் உங்களுக்கு நல்லது.

    Reply : 0       0

    abu sama Tuesday, 22 January 2013 05:16 AM

    ஹக்கிம் அவர்கலின் பேச்சில் எதுவுமே இல்லை. சுத்தி வலைத்து எதையோ சொல்ல நினைக்கின்ரார் ஆனால் சொல்ல முடியாது தவிக்கிரார். மக்கலை ஏமாத்தாது சொல்ல வேன்டியதை வேன்டிய இடத்தில் உருத்தி சொல்லுன்கல். உன்கலுக்கு நன்மையாவது கிடைக்கும்.

    Reply : 0       0

    ameen Tuesday, 22 January 2013 05:46 AM

    ரொம்பவும் ஜொக் சொல்கிரார்.

    Reply : 0       0

    Krish Tuesday, 22 January 2013 06:20 AM

    கேள்வியும் நானே பதிலும் நானே, என்ன ஸார் சாதாரண சந்திக் கடையில் பேசும் விசயம் எல்லாம் தெரிஞ்சு வச்சுக்கிட்டு அத மேடைல பேசுறீர், ஒரு மந்திரியா? ஒரு மாணம்கெட்ட காட்சி தலைவரா? முஸ்லிம் உரிமை என்று பேசி பேசி வோட்டு கேட்க தெரிஞ்சா நீர்தான் அத பாதுகாட்க வேணும், ரிஸாத் ஓ அத்தாவுல்லா ஓ அல்ல........

    Reply : 0       0

    anver Tuesday, 22 January 2013 07:12 AM

    தப்பி அக்கையூர் முல்லா பொரிக்கஞ் சட்டிக்குள் இருந்து கொண்டு மாற்றான் புத்தியில் இயங்காமல் சொந்தமாக இருந்தாமட்டும் இயங்குமணி

    Reply : 0       0

    அக்கையூர் முல்லா Tuesday, 22 January 2013 08:32 AM

    இங்கே பின்னூட்டம் தந்தவர்கள் அனைவரும் உங்க தலைவரை பற்றி எதுவுமே நல்லா பேசினதா தெரியல்லையே! அன்வர் அவர்களே! உங்கள் தலைவர் ஹக்கீமின் சேவை நாட்டுக்கு தேவை. இவரால் இயலுமென்றால் குளியாபிட்டியவில் 2013-01-24இல் நடக்க இருக்கும் ஹலால் எதிர்ப்புப் போராட்டத்தை நிறுத்தட்டும்.
    என் புத்தி சொந்த புத்தியா? இல்லை உங்க புத்தி மந்த புத்தியா? என பார்ப்போம்

    Reply : 0       0

    Niyas Tuesday, 22 January 2013 10:58 AM

    ஜனாதிபதிக்கிட்ட போய் கேட்கலாமே சார்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X