2025 ஜூலை 09, புதன்கிழமை

தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம்; ஜனாதிபதியிடம் எடுத்துரைப்பேன்: ஹக்கீம்

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 13 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


தம்புள்ளை பள்ளிவாசலை இடிப்பது மற்றும் அகற்றுவது சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பற்றி  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் அரசாங்கத்தினதும் கவனத்திற்கு கொண்டுவருவதாக நீதியமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இந்த பள்ளிவாசல் உடைக்கப்படமாட்டாதென்று ஜனாதிபதி கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது கல்முனையில் பகிரங்கமாக அறிவித்ததையும் அமைச்சர் ஹக்கீம் நினைவூட்டினார்.

தம்புள்ளை பள்ளிவாசலை உடைப்பதற்கு மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்ததையடுத்து அமைச்சர் ஹக்கீம் வெள்ளிக்கிழமை (13) நண்பகல் ஜூம்ஆ தொழுகைக்கு சற்று முன்பதாக அங்கு நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்தார்.

தம்புள்ளை பள்ளிவாசல் நிருவாகிகளோடு அவர் அந்தப் பள்ளிவாசலில் இதுபற்றி கலந்துரையடினார். தம்புள்ளை பள்ளிவாசலை ஊடறுத்து புதிய பாதையொன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் பள்ளிவாசல் உடைக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சரிடம் கூறப்பட்டது. 

புதிய பாதையொன்று  அமைவதற்கான அடையாளங்கள் பள்ளிவாசல் எல்லையில் இடப்பட்டுள்ளதால் தம்புள்ளை பிரதேச முஸ்லிம் மக்களை அச்சத்திற்குள்ளாக்கி இருப்பதாகவும், தம்புள்ளை புனித நகர அபிவிருத்திக்கு அங்குள்ள முஸ்லிம் மக்கள் எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லையென்றும் ஆனால் தற்பொழுது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை காரணமாக பள்ளிவாசல் இடிக்கப்படும் ஆபத்து நிலவுவது மட்டுமல்லாது அதற்கு அண்மையில் குடியிருக்கும் 12 முஸ்லிம் குடும்பங்களும் 18 சிங்கள குடும்பங்களும் 2 தமிழ் குடும்பங்களும் தமது நிலங்களையும் வதிவிடங்களையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

பள்ளிவாசல் நிருவாகத்தினர் ஜனாதிபதி அளித்த வாக்குறுதியையும் அமைச்சர் ஹக்கீம் மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் இதுபற்றி தெரிவித்த நம்பிக்கையூட்டும் தகவல்களையும் அமைச்சரிடம் நினைவுபடுத்தி இந்த பள்ளிவாசலை பாதுகாத்து தருமாறு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

அத்துடன், இந்த பள்ளிவாசல் இடிக்கப்படுவதற்கு தம்புள்ளை முஸ்லிம்கள் தமது முழு எதிர்ப்பையும் வெளிப்படுத்துவார்கள் என்றும் கூறப்பட்டது. அமைச்சர் ஹக்கீம் தம்மிடம் காண்பிக்கப்பட்ட பள்ளிவாசல் அமைவிடம் தொடர்பான புதிய வரைபடங்களையும் நுணுக்கமாக பரிசீலித்தார்.

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறும் மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி ஊடாக உரிய முயற்சி மேற்கொள்ளப்படாவிட்டால் தேர்தல் முடிந்த உடனேயே பள்ளிவாசல் உடைக்கப்படும் அபாயம் உள்ளது என அவர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் என இராணுவ, பொலிஸ் அதிகாரிகளே இந்நடவடிக்கையில் சிவில் உடையில் ஈடுபட்டுள்ளதாகவும் தம்புள்ளை முஸ்லிம்கள் தரப்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. 

இந்த விடயத்தை அமைச்சர் ஹக்கீம் உடனடியாக கையாள்வதாகவும், ஏனைய அமைச்சர்கள் சிலருடனும் இதுபற்றி கலந்தாலோசிப்பதாகவும் உறுதியளித்தார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவமும் அமைச்சருடன் தம்புள்ளைபள்ளிவாசலுக்கு வந்திருந்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .