2025 ஜூலை 17, வியாழக்கிழமை

'இன்றைய நல்லாட்சியை நாம் விலை கொடுத்து தான் பெற்றோம்'

Gavitha   / 2015 பெப்ரவரி 24 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த காலங்களில் இந்த நாட்டில் ஒரு ஊடக மாநாடு நடத்த முடியாது. ஒரு பொதுக்கூட்டம் நடத்த முடியாது. ஒரு ஜனநாயக ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது. ஒரு அரசியல் ஊர்வலம் நடத்த முடியாது. இன்று எவரும் கூட்டம், ஊடக மாநாடு, ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என்று ஜனநாயக வரம்பு அனுமதித்த எதையும் செய்யலாம். அங்கு அரசியல் பேசி மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என பிரகடனம் செய்யலாம். அவற்றை செய்ய முழுமையான உரிமைகள் இன்று உள்ளன.

நாம் இன்று ஏற்படுத்தியுள்ள நல்லாட்சி சூழலின் வெளிப்பாடுத்தான் இதுவாகும். அதன் இன்னொரு வெளிபாடாகத்தான், இன்று கொழும்பு மாநகரசபையில் இந்து விழா நடக்கின்றது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பு மாநகரசபையில், மாநகரசபை உறுப்பினர் கே. ரீ. குருசாமியின் ஏற்பாட்டில் நடைபெற்ற, மாநகரசபையின் 150அவது நிறைவுக்கான இந்து சமய விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்து கலாச்சார அமைச்சர் சுவாமிநாதன், மாநகர முதல்வர் முசம்மில் உட்பட பெருந்தொகையானோர் கலந்துக்கொண்ட நிகழ்வில், தொடர்ந்து உரையாற்றிய அவர்.

'கொழும்பு நாகரசபை என்பது ஒரு அரசியல் நிறுவனம். மக்கள் ஆணையை பெற்ற மக்கள் பிரதிநிதிகளின் சபை இதுவாகும். ஒரு காலத்தில் கொழும்பு மாநகரசபையில் மக்கள் பிரதிநிதிகளுக்கு இடமில்லை. இங்கே அதிகாரிகளின் ஆட்சி நடைபெற்றது. அந்த காலம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது.

ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதியுடன் அது முடிந்து விட்டது. உண்மையில் இந்த வருடம் ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதியன்றுதான் இந்த மாநகரசபை மீண்டும் உருவாகியுள்ளது என்று நான் சொல்வேன். இதைதான் நமது முதல்வர் சமீபத்தில் சொன்னார். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

இந்த நல்லாட்சி சூழலை எவரும் எமக்கு தங்கத்தட்டில் வைத்து தரவில்லை. நாம் இடையில் அல்லது இறுதியில் வந்தவர்கள் அல்ல. நாம் பத்து ஆண்டு காலம் போராடி பட்ட கஷ்டத்தின் பயனைத்தான் இன்று முழு நாடும் அனுபவிக்கின்றது. இதற்காக நாம் பல்லாண்டுகளாக பாடுபட்டு உழைத்துள்ளோம். நாடு முழுக்க ஓடோடி பணியாற்றியுள்ளோம். ஏச்சு, பேச்சு, கல்லடி, துப்பாக்கி குண்டு ஆகியவற்றை கண்டுள்ளோம். இன்றைய  நல்லாட்சியை நாம் விலை கொடுத்துதான் பெற்றோம். அதை மறந்துவிடாதீர்கள்.

இன்று இந்த நாட்டில் உருவாகியுள்ள இந்த நல்லாட்சி சூழலின் விளைவுகள் படிப்படியாகத்தான் வரும். அதற்குள் இந்த சூழலை கெடுக்க சிலர் முயல்கிறார்கள். ஆட்சியில் இருந்து போனவரை மீண்டும் கொண்டு வர முயல்கிறார்கள். எவருக்கும் இந்த நாட்டில் அரசியல் செய்ய உரிமை உண்டு. ஆட்சிக்கு வர முயற்சி செய்ய உரிமை உண்டு.

ஆனால், அதற்கு இனவாதத்தை பயன்படுத்த எவருக்கும் இடம் கொடுக்க முடியாது. சிங்கள, தமிழ், முஸ்லிம் இனத்தவரையும் பௌத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க மதத்தவரையும் ஒருவருக்கொருவர் எதிராக தூண்டிவிட்டு தம் சொந்த தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள எவருக்கும் இடமில்லை. இங்கு எவரும் இனவாதம் பேச முடியாது. அதை அனுமதிக்க முடியாது.

இன்று நாம் ஒருவிதத்தில் தேசிய அரசு ஒன்றை நடத்துகின்றோம். நமது ஜனாதிபதி ஒரு கட்சி. பிரதமர் இன்னொரு கட்சி. நாம் வேறொரு கட்சி. இன்னும் பல கட்சிகள் இணைந்துள்ளன. ஆகவே இது ஒரு தேசிய அரசு. இது வேண்டாம் என்று எவரும் முடிவு எடுத்தால் அதற்கும் முகங்கொடுக்க நாம் தயார். எல்லாவற்றையும் கலைத்துவிட்டு நாம் புதிய தேர்தலுக்கு செல்வோம். நமது கொழும்பிலே தேர்தலுக்கு நாம் எப்போதோ தயார். பெருந்தொகையான வாக்குகளுடன் வெற்றி பெறுவோம் என்பதை நான் இந்த கொழும்பு மாநகரசபை கட்டடத்தில் இருந்து அறிவிக்கின்றேன்' என்று கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X