2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

Kanagaraj   / 2015 மார்ச் 05 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் குருநாகல் வீதி, கல்குளம் சந்தியில் புதன்கிழமை (04) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் மதுரங்குளி மேர்சி கல்வி நிலையத்தில் உதவி கணக்காளராக கடமைபுரியும் 25 வயது நிரம்பிய ஹயர்தீன் சப்ரான் எனும் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிசார் தெரிவித்தனர்.

கல்கமுவ பிரதேசத்தை சேர்ந்த இவர்  பிள்ளையொருவரின் தந்தையாவார். மதுரங்குளி மேர்சி கல்வி நிலையத்தில் கடமையாற்றும் இவர்,  வெள்ளிக்கிழமைகளில் ஊருக்கு சென்று மீண்டும் திங்கட்கிழமை கடமைக்கு திரும்புவது வழமை. எனினும் வியாழக்கிழமை விடுமுறை தினம் என்றபடியால் புதன்கிழமை இரவு, இவர் வீடு செல்கின்ற வழியில் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக புத்தளம் திடீர் மரண விசாரனை அதிகாரி  பீ.எம்.ஹிஸாம் தெரிவித்தார்.

கல்கமுவ சந்தியில்  நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொரியொன்றுடன் இவர் சென்ற மோட்டார் சைக்கிள் மோதி இவர் கீழே விழுந்த சமயம் அவ்வீதியால் வந்த குருநாகல் புத்தளம் பஸ்ஸில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

எனினும், இவ்விபத்துக்கு காரணமான பஸ் சாரதி இது வரையும் கைது செய்யப்படவில்லை என மரணமானவரின் உறவினர்களால் வடமேல் மாகாண சபை  உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சடலம் வைக்கப்பட்டுள்ள புத்தளம் தள வைத்தியசாலைக்கு நியாஸ் வருகை தந்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருடன் தொடர்பு கொண்டு விபத்துக்கு காரணமான பஸ் சாரதியை கைது செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். 

புத்தளம் பொலிசார் இது  தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதோடு  புத்தளம் திடீர் மரண விசாரனை அதிகாரி  பீ.எம்.ஹிஸாம் மரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X