2025 மே 08, வியாழக்கிழமை

தமிழ் இந்து பாடசாலைகளின் வளர்ச்சிக்கு கோவில்கள் உதவவேண்டும்: மனோ

Gavitha   / 2015 மார்ச் 08 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாவட்டத்தின்  மாநகர பிரதேச எல்லைகளுக்குள் மட்டக்குளி முதல் தெஹிவளை வரை அருள்பாலிக்கின்ற பெரிய இந்து ஆலயங்கள், கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்-இந்து பாடசாலைகளின் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும். 

இந்து ஆலயங்களின் அறங்காவலர் சபையினர், தமது ஆலய வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட விகிதத்தை இந்த நல்ல நோக்கத்துக்கு ஒதுக்கித்தர முன்வர வேண்டும்.  இதற்காக கொழும்பின் சகல ஆலயங்களின் அறங்காவல் பிரதிநிதிகளை உள்வாங்கி ஒரு அறக்கட்டளை அமைக்கப்பட வேண்டும். எந்த பாடசாலைக்கு என்ன தேவை, எந்த பணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் போன்ற விபரங்களை திரட்டி தந்து இந்த அறக்கட்டளைக்கு உதவிட என்னால் முடியும்.
 
ஆலய வருமானத்தின் ஒரு சிறுபகுதியை கொண்டு ஏழை பிள்ளைகளின் அறிவுக்கண்களை திறந்து விடுவது, ஆலயங்களில் குடியிருக்கும் தெய்வத்தை மகிழ்விக்கும்  மகத்தான பணி என்பதில் மாற்றுக்கருத்து  இருக்க முடியுமா? என ஜனநாயக மக்கள் முன்னணி  தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
 
வடகொழும்பில் இருந்து கொழும்பு கப்பிதாவத்தை தொண்டர் வித்தியாலத்துக்கு கல்வி பயில வரும்  மாணவர்களுக்கான விசேட பஸ் சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
 
'கொழும்பு பாடசாலைகள் என்றால் வசதியான பாடசாலைகள் என்று பொதுவான கருத்து நிலவுகிறது. இது மிகவும் ஒரு பிழையான கருத்து ஆகும். தனியார் மிஷினரி பாடசாலைகள், சர்வதேச பாடசாலைகள் மற்றும் அரசின் சில தேசிய பாடசாலைகளை தவிர ஏனைய அனைத்து தமிழ் பாடசாலைகளும்  பல்வேறு குறைபாடுகளை கொண்டுள்ளன. இந்த பாடசாலைகளில் மத்திய தர மற்றும் கொழும்பின் மிகவும் பின் தங்கிய நகர தோட்டங்களில் வாழும் குடும்பத்திலுள்ள  பிள்ளைகள் கல்வி கற்கின்றார்கள். 

மத்திய, மாகாண அரசுகளின் நிதி ஒதுக்கீடுகள் பாடசாலைகளின் தேவைகளை நிறைவேற்ற போதுமானவைகளாக இல்லை. இந்நிலையில் தனியார் ஒத்துழைப்புகள், அறக்கட்டளைகள், நன்கொடைகள் ஆகியவை அவசியப்படுகின்றன.
 
இந்த கப்பிதாவத்தை தொண்டர் வித்தியாலயம், இங்கே அமைந்துள்ள சிவன் கோவில், பிள்ளையார் கோவில் ஆகிய இந்த இரண்டு ஆலயங்களின் அருகாமையில் அமைந்துள்ளது. இந்த பாடசாலையில் மாணவர் தொகை மிகவும் குறைவு. இதனால் இந்த பாடசாலை மூடப்படவிருந்தது. 

மாணவர் தொகை குறிப்பிட்ட அளவில் இல்லாவிட்டால் பாடசாலை மூடப்பட்டு, இருக்கும் சிறுதொகை மாணவர்கள் வேறு பாடசாலைக்கு மாற்றப்பட்டு, இந்த பாடசாலை கட்டிடம் அரசாங்கத்தின் வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படும். சில மாதங்களுக்கு முன் இந்த பாடசாலை கட்டடத்தில் மிலிடரி மெஸ் என்ற  இராணுவ உணவுச்சாலை அமைக்கும் யோசனை ஒன்று பரிசீலிக்கப்பட்டது. அதை நான் நிறுத்தினேன். பிறகு வெளியூரிலிருந்து கொழும்பு வரும் ஆசிரியர்களின் தங்குமிடமாக இதை மாற்றலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டது. அதையும் நான் நிறுத்தியுள்ளேன்.
 
இதற்கு காரணம் இங்கு நல்ல கட்டட வசதி உள்ளது. இவற்றை பாதுகாக்க  மாணவர் தொகையை அதிகரிக்க வேண்டும். அதன் ஒரு கட்டமாகத்தான், இன்று சுமார் இருபது புதிய மாணவர்களை இந்த பாடசாலையில் சேர்ப்பித்து, அவர்கள் மட்டக்குளியில் இருந்து இங்கே வர நிரந்தரமான பாடசாலை பஸ் சேவை ஒன்றையும் ஆரம்பித்துள்ளேன். ஆனால், இது போதாது. இங்கே தங்குமிட வசதிகளை அமைத்து, இலவச உணவு வழங்கி ஏழை பிள்ளைகளின் விடுதி பாடசாலையாக இதை மாற்றி மாணவர் தொகையை அதிகரிக்க முடிவு செய்துள்ளேன். இந்த விடயத்தை என் கவனத்துக்கு கொண்டு வந்த பழைய மாணவர்களையும் அதிபரையும் பஸ் சேவையை ஏற்பாடு செய்த மாநகரசபை உறுப்பினர் பிரியாணி குணரத்ன, கல்வி சபை செயலாளர் பானு சிவப்பிரகாசம்  ஆகியோரையும் பாராட்டுகிறேன்.
 
இதைபோல் விமானப்படை முகாம் தேவைக்காக கைப்பற்றப்படவிருந்த,  பொரளையில் அமைந்துள்ள ஒரு தமிழ் பாடசாலை மைதானத்தையும் நான் பல்லாண்டுகளுக்கு முன் காப்பாற்றினேன். இவற்றை எந்நாளும் என்னால் செய்ய முடியாது. எந்நாளும் நான் இங்கே இருக்க போவதுமில்லை. மாணவர்கள் இல்லாமல் பயன்படாத கட்டடங்கள், மைதானங்கள் இருந்தால் அவை மாற்று தேவைகளுக்காக பறிபோகத்தான் செய்யும். அதில் ஒரு நியாயமும் இருக்கிறது. இதற்கு ஒரே தீர்வு மாணவர் தொகையை அதிகரிப்பது என்பதாகும்.
 
எனவே, எமது பாடசாலைகளை காப்பாற்றி அங்கு மாணவர் தொகையை அதிகரிக்க இந்து ஆலயங்கள் எனக்கு உதவிட வேண்டும். இங்கே இராணுவ மெஸ் அமைக்கப்பட்டால், இந்த கப்பித்தாவத்தையில் நிலவும் சைவ-இந்து சூழலே காணாமல் விடும். அதன்பின் இந்த பாடசாலை மட்டுமல்ல, இங்குள்ள கோவில்களும் காணாமல் போய் விடும். உண்மையில் இந்த இரண்டு கோவில்களுக்கும் இந்த பாடசாலை இங்கே செவ்வனே நடப்பதுதான் பெரும் பாதுகாப்பு என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X