Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 மார்ச் 09 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட். ஷாஜஹான்
நீர்கொழும்பு, பிரதான ரயில் நிலையத்துக்கு முன்னால் ரயில்வே திணைக்களத்துக்கு சொந்தமான காணியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களை அகற்றுவதற்கு நீர்கொழும்பு மாநகர சபை எடுத்துள்ள தீர்மானத்தால் குறித்த வர்த்தக நிலையங்களை நடத்தி வரும் வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
'இன்னும் 07 தினங்களுக்குள் வியாபாரிகள் தமது கடைகளை இங்கிருந்து அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றாவிடில் நீர்கொழும்பு மாநகர சபை 07 தினங்களுக்குப் பின்னர் முன்னறிவித்தலின்றி இங்குள்ள கடைகளை அகற்றும்' என கடந்த 02ஆம் திகதி கடைத் தொகுதிகளுக்கு முன்பாக நீர்கொழும்பு மாநகர சபையினால் ஒட்டப்பட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அங்கு வியாபார நிலையமொன்றை நடத்தி வரும் பெரியமுல்லையைச் சேர்ந்த முஹம்மத் நஸீர் தெரிவிக்கையில்,
'நாங்கள் ரயில் நிலையத்துக்கு முன்னபாகவுள்ள புரோட்வே வீதியில் கடந்த 20 வருடங்களாக வியாபாரம் செய்து வருகிறோம். அந்த நடைபாதை வீதியில் எமது வர்த்தக நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்பாக நீர்கொழும்பு மாநகர சபை, ரயில்வே திணைக்களத்துக்கு சொந்தமான காணியில் எமக்கு தற்காலிகமாக வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி அளித்தது.'
'மேல் மாகாண சபை அமைச்சர் நிமால் லான்ஸா அப்போது ரயில்வே துறை அமைச்சராக இருந்த குமார் வெல்கமவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தக் காணியை வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகர சபையூடாக அனுமதியை பெற்றுக் கொடுத்தார். அப்போது 6 மாத காலம் இங்கு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதியளிக்கப்பட்டதுடன் அதற்கிடையில் வேறோர் இடத்தில் எமக்கு கடைகளை அமைத்து தருவதாகவும் கூறப்பட்டது. நாங்கள் கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக இந்த இடத்தில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.'
'இந்த கடைத் தொகுதிகளை அமைப்பதற்கு ஒவ்வொரு வர்த்தக நிலைய உரிமையாளரும் தலா 3 இலட்சம் ரூபாய் வரை செலவழித்துள்ளனர். கடன் பெற்றும் நகைகளை விற்றும் கடைகளை அமைத்துள்ளனர். மின்சார இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு கடை உரிமையாளரும் 70 ரூபாவை வாடகைப் பணமாக மாநகர சபைக்கு செலுத்தி வருகிறோம். இங்கு மொத்தமாக 44 கடைகள் உள்ளன' என்றார்.
குறித்த வர்த்தக நிலையத்தில் செல்லிடத் தொலைப்பேசி நிலையமொன்றை நடத்தி வரும் இர்ஷாத் தெரிவிக்கையில்,
'இங்கு பல்வேறு வகையான வியாபாரிகள் தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். தினசரி சிறியதொரு தொகையே எமக்கு வருமானமாக கிடைக்கின்றது. இந்தக் கடைகளை உடைப்பதற்கான பிரேரணையை நீர்கொழும்பு மாநகர சபையில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஹீஸான் கொண்டு வந்துள்ளார். அந்த பிரேரணை நிறைவேற்றப்பட்ட அதற்கிணங்க இந்த அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது. மாநகர சபை உறுப்பினர் எமக்கு அநீதி இழைத்துள்ளார். கடைகள் உடைக்கப்பட்டால் நாங்கள் தெருவுக்கு வருவோம். 80 குடும்பங்கள் பாதிக்கப்படும்' என்றார்.
இதேவேளை, நீர்கொழும்பு ரயில்வே திணைக்கள அதிகாரி ஒருவரிடம் இது தொடர்பாக நாம் வினவிய போது,
'எமது ரயில்வே நிலையத்துக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கடைகள் அகற்றப்பட வேண்டும். இது தொடர்பாக நாங்கள் நீர்கொழும்பு மாநகர சபைக்கு பல தடவைகள் அறிவித்துள்ளோம். இந்தக் காணியை முறையற்ற விதத்தில் பயன்படுத்த அரசியல்வாதிகள் அனுமதித்துள்ளனர்.' என்றார்.
குறித்த நிலையங்கள் எந்தவேளையும் உடைக்கப்படலாம் என்ற அச்சத்துடன் வியாரிகள் உள்ளனர். தமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே அவர்களது வேண்டுகோளாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
39 minute ago
2 hours ago