2025 ஜூலை 17, வியாழக்கிழமை

உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான எல்லை நிர்ணயத்தில் குறைபாடு

Kogilavani   / 2015 மார்ச் 26 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

உள்ளுராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான எல்லை நிர்ணயத்தின் போது கல்பிட்டி மற்றும் ஆராச்சிக்கட்டு பிரதேச சபைகளுக்கான எல்லைகள் தமிழ், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் தெரிவித்தார்.

இதுதொடர்பில் தமது அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளிபடுத்தும் வகையில் மகஜரொன்றை புத்தளம் மாவட்டச் செயலகத்தில் ஒப்படைத்துள்ளார்.

கல்பிட்டி பிரதேச சபைக்கான எல்லை நிர்ணயத்தின்போது தொடராக இருந்து வரும் கல்பிட்டி பிரதேச சபைக்கான முஸ்லிம் தலைமைத்துவம் இல்லாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கல்பிட்டி பிரதேச சபை எல்லையினுள் சுமார் 80 ஆயிரததுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.

இந்த மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். கடந்த காலங்களில் இது தொடர்பான கூட்டங்களுக்கு நாம் அழைக்கப்படவில்லை. எமது ஆலோசனைகளும் பெறப்படவில்லை.
அதேபோன்று ஆராச்சிக்கட்டு பிரதேச சபைக்கான எல்லை நிர்ணயத்தின் போதும் தமிழர்கள் அதிகளவில் வாழும் உடப்பு பிரதேசத்தின் இரண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவும் ஆண்டிமுனை பிரிவும் ஒரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக இப்பிரதேசத்தில் இதுவரை காலமும் இருந்து வந்த இரண்டு, மூன்று பிரதேச சபை பிரதிநிதிகள் தொகை ஒன்றாகக் குறைக்கப்பட்டு அம்மக்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த எல்லைகளள் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும், மக்களினதும், சிவில் அமைப்புக்களினதும், மதத் தலைவர்களினதும் கருத்துக்கள் பெறப்பட வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மகஜரை நான் புத்தளம் மாவட்ட செயலகத்தில் ஒப்படைத்துள்ளேன்.

உடப்பு கோவில் சார்பாகவும் ஒரு மகஜர் என்னிடம் தரப்பட்டு அதுவும் ஒப்படைக்கப்பட்டதோடு, அக்கரைப்பற்று பிராந்திய உலமா சபையின் சார்பாக ஒரு மகஜரும் அதன் செயலாளர் அஷ்ஷெய்க் முஹம்மது மிஹ்லாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன் பிரதிகள் ஜனாதிபதி, பிரதமர், உள்ளுராட்சி அமைச்சர் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது' என  அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X