2025 மே 07, புதன்கிழமை

ஜனாதிபதி விஜயம் இரத்துக்கு புனரமைப்பின் தடங்கலே காரணம்

Princiya Dixci   / 2015 ஜூலை 24 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.இஸட். ஷாஜஹான்

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  நேற்று வியாழக்கிழமை (23) நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம் செய்து  வைத்தியசாலையின் புனரமைப்பு வேலைகளையும், புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடங்களையும் மேற்பார்வையிட இருந்த நிகழ்வு,  திடீரென்று இரத்துச் செய்யப்பட்டமைக்கு புனரமைப்பு வேலைகள் நிறைவடையாமையே காரணம் என்று வைத்தியசாலையை பாதுகாக்கும் அமைப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலர் தெரிவித்தனர்.

உடைந்து விழும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் ஏழு மாடி கட்டடத்தின் புனரமைப்பு வேலைகளுக்காக, மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட 300 மில்லியன் ரூபாய் நிதி இதுவரை ஒதுக்கீடு செய்யப்படாததனால், புனரமைப்பு வேலைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

கடந்த ஜூன் மாதம்,  நீர்கொழும்பு  மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, வைத்தியசாலையை பார்வையிட்ட பின்னர்  நடைபெற்ற கூட்டத்தில் வைத்து, வைத்தியசாலையின் ஏழு மாடிக் கட்டடத்தை புனரமைப்பு செய்ய 300 மில்லியன் ரூபாயும் இரும்பினால் நிர்மாணிக்கப்படும் விடுதிகளைக் கொண்ட  நான்கு கட்டடங்களை புதிததாக அமைப்பதற்காக, 200 மில்லியன் ரூபாயும் தமது  அமைச்சினால் உடனடியாக ஒதுக்கப்படவுள்ளதாக  தெரிவித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

தற்போது 200 மில்லியன் ரூபாய் செலவில் புதிய விடுதிகளுக்கான நிர்மாணிப்பு  வேலைகள் நடைபெற்று வருகிறது. ஆயினும், ஏழு மாடிக் கட்டடத்தின் புனரமைப்பு  வேலைகள் ஆரம்பிக்கப்படாமல் உள்ளன. 

இதன் காரணமாக நோயாளிகளும் வைத்தியர்களும், வைத்தியசாலை ஊழியர்களும் பல்வேறு அசௌகாரியங்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்தக் கட்டடத்தின் புனரமைப்பு வேலைகளுக்கான நிதி உடனடியாக ஒதுக்கப்பட வேண்டும்.  அத்துடன், தகுதி வாய்ந்த பேராசிரியர் ஒருவரின் மேற்பார்வையின் கீழ் அல்லது பொறுப்பின் கீழ் அந்த புணரமைப்பு வேலைகள் நடைபெற வேண்டும். அதற்காக ஒரு குழுவும் அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X