2025 மே 07, புதன்கிழமை

சிலாபம் ரயிலில் குண்டுவெடிப்பு: பணியாளர் காயம்

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர், க.மகாதேவன்

சிலாபம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலொன்றின் ஆசனத்தில் இருந்த சிறிய ரக குண்டொன்று வெடித்ததில் ரயில் நிலையப் பணியாளர் ஒருவர் காயமடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம், நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.  சிலாபத்தைச் சேர்ந்த ரணசிங்க லேகம்லாகே சஞ்ஜீவ ரணசிங்க (வயது 23) என்ற இளைஞனே இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவராவார்.

மாலை ஏழு மணிக்கு கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிப் புறப்படும் 422ஆம் இலக்க அலுவலக ரயில், சிலாபம் ரயில் நிலையத்தை வந்தடைந்த பின்னர் இரவு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த புகையிரத அறைகளை துப்புறவு செய்யும் பணியாளர் புகையிரத்தினுள் சென்று தனது பணிகளைச் செய்து கொண்டிருந்த போது அங்கு ஆசனம் ஒன்றில் சிறிய பொதி ஒன்று இருந்துள்ளதை அவதானித்து அதனை எடுத்து பரிசோதித்த போது அது வெடித்து அப்பணியாளர் காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சிறியளவிலான குண்டு ஒன்றைத் தயாரிக்கும் நோக்கில் வெடி பொருட்கள் மற்றும் சிறிய இரும்பு உருண்டைகள் மற்றும் வெடி மருந்துகள் அப்பொதியினுள் இருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம் நகரில் நேற்றைய தினம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததால், இந்தப் பொதியினைக் கொண்டுவந்துள்ளவர் அச்சமடைந்து, அதனை ரயிலிலேயே வைத்துவிட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X