2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சாதகமான பதிலையடுத்து முடிவுக்கு வந்த ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2016 ஜூன் 15 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

கிராமங்களை ஊடுறுவும் காட்டு யானைகளை விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி,  இன்று புதன்கிழமை காலை, கிராம மக்களால் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் சாதகமான பதிலையடுத்து இன்று மாலை கைவிடப்பட்டது.

புத்தளம் குருநாகல் வீதியின் கல்குளம் சந்தியிலேயே இவ்வார்ப்பாட்டம் வீதியை வழிமறித்து  இன்று காலை 7.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்குளம், கந்தயாய, கிவுல இல.4, பளுகஸ்வெவ, எத்துன்கொடை, முரியாகுளம், உத்தர அட்டவில்லு, தங்கஹவெவ, போகஹயாய, கட்டுவ, மெல்லங்குளம், உஸ்பிம குடியேற்றம், கல்லடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தால் புத்தளம் - குருநாகல் வீதியின் வாகன போக்குவரத்து கல்குளம் சந்தியில் முற்றாகத் தடைப்பட்டது. 

இதனால், புத்தளம் நகரில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் உள்ளிட்ட ஏனைய தேவைகள் நிமித்தம் புத்தளம் நகருக்குப் பயணித்தோரையும் ஆர்ப்பாட்டத்தைக் கடந்து பயணிப்பதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் இடமளிக்காததால் அவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

இதன் காரணமாக பயணிகள் நீண்ட தூரம் கால்நடையாகப் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. எனினும் ஆர்ப்பாட்டத்தின் நடுவே அம்புலனஸ் வண்டி பயணிப்பதற்கு மாத்திரம் இடமளிக்கப்பட்டது.

நீண்ட நாட்களாக காட்டு யானைகள் கிராமங்களினுள் நுழைந்து மா, பலா உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து மனித உயிர்களுக்கும் பல சேதங்களை உண்டு பண்ணி வந்ததாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன் போது தெரிவித்தனர்.

காட்டு யானைகளை தப்போவ வனாந்தரம் அல்லது வில்பத்து வனாந்தரத்தினுள் விரட்டுவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதுவரை இந்த ஆர்ப்பாட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். 

இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது முதல் புத்தளம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகளவிலான பொலிஸார் கல்குளம் சந்தியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு முற்பட்ட வேளை பொலிஸார் அதனைத் தடுப்பதற்கு முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை.

இந்நிலையில், இன்று பகலாகும் வரையில் தமது கோரிக்கைக்கு எவ்வித பதிலும் உரிய தரப்பாரிடமிருந்து கிடைக்காததால் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலவரமடைந்து செயற்படத் தொடங்கியதுடன், ஒரு சில நிமிடங்களில் வீதியில் நடுவில் தகரத்தில் கொட்டகை ஒன்றும் ஆர்ப்பாட்டக்காரர்களால் அமைக்கப்பட்டது.

அத்தோடு, புத்தளம் நகருக்குப் பயணிப்பதற்கு இருந்த உள் வீதிகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மூடிவிட்டனர். இந்நிலையில் புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  மக்களுடன் கலந்துரையாடி அவர்களிலிருந்து பத்து பேர் கொண்ட குழுவை புத்தளம் உதவி வனவிலங்கு பணிப்பாளருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இதன் பின்னர் இவர்களுக்கும் புத்தளம் உதவி வனவிலங்கு பணிப்பாளருக்குமிடையில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்றப் பின்னர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு விஜயம் செய்த புத்தளம் உதவி வனவிலங்கு பணிப்பாளர்  ஆறு விடயங்களின் கீழ் காட்டு யானைகளை காட்டுக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

அத்துடன், அதன் பிரதான விடயமாக காட்டு யானைகளை விரட்டும் வரையில் தற்காலிகமாக தங்கஹவல விகாரையில் ஆறு வனவிலங்கு அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் அலுவலகம் ஒன்றை அமைத்து தங்க வைக்கப்படுவதாகவும் நேற்றிலிருந்தே காட்டு யானைகளை விரட்டும் பணிகளை முன்னெடுப்பதாகவும்  அதன் பின்னர் ஏனைய விடயங்களை கட்டம் கட்டமாக நிறைவேற்றுவதாகவும் எழுத்து மூலமாக வாக்குறுதியை வழங்கினார்.

இதன் பின்னர் சுமார் எட்டு மணி நேரமாக மூடப்பட்டிருந்த புத்தளம் - குருநாகல் பிரதான வீதி மற்றும் உள் வீதிகளும் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X