2025 மே 06, செவ்வாய்க்கிழமை

நாணயமாற்று நிலையத்தில் திருட்டு: வெளிநாட்டவர்களுக்கு வலைவீச்சு

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

- முஹம்மது முஸப்பிர்

வென்னப்புவ நகரில் அமைந்துள்ள வெளிநாட்டு நாணயப் பரிமாற்றும் நிலையத்துக்கு, நேற்றுப் புதன்கிழமை (03) பகல் சென்றுள்ள வெளிநாட்டவர்கள் இருவர், வெளிநாட்டு நாணயங்களைத் தந்திரமாகத் திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக வென்னப்பவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நாணயப்பரிமாற்று நிலையத்துக்குச் சென்று குறிப்பிட்ட வெளிநாட்டவர்கள் இருவரும், 100 அமெரிக்க டொலர் தாளைக்  கொடுத்து, 50 அமெரிக்க டொலர் தாள்களைக் கேட்டுள்ளனர். நாணயப் பரிமாற்று ஊழியர், இரண்டு 50 டொலர்களைக் கொடுத்த போது அதிலொன்று பழையதாக இருப்பதாகத் தெரிவித்து, அதனை மாற்றிப் பெற்றுக் கொண்டுள்ளதோடு, சவூதி ரியால் மற்றும் டுபாய் டிராம் தாள்களையும் கோரியுள்ளனர்.

ஊழியரும் கோரிய தாள்களை அவர்கள் முன் எடுத்து வைத்திருந்த போது அவற்றைத் தந்திரமான முறையில் அங்கிருந்து திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து இலட்சத்தி தொன்னூற்றி ஓராயிரம் ரூபாய் பெறுமதியான ஆயிரம் டொலர், 8,500 சவூதி ரியால் மற்றும் ஆயிரம் டுபாய் டிராம் ஆகியனவே இவ்வாறு திருடப்பட்டுள்ளன.

வெளிநாட்டு பிரஜைகள் இருவரும் வெளியேறிய பின்னர் நாணயத் தாள்களைக் கணக்கிட்ட போது இருப்பில் இருந்த நாணயத் தாள்கள் பாரியளவில் குறைவடைந்துள்ளதை அவதானித்து பின்னர் அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்புக் கமெராக்களை பரிசீலித்த போது நாணயத் தாள்களை அங்கு வந்த வெளிநாட்டவர்கள் கைகளில் மறைத்துக் கொள்ளும் காட்சி பதிவாகியிருந்துள்ளது.

இதனையடுத்தே குறித்த நாணயப் பரிமாற்று நிலையத்தின் உரிமையாளரால் வென்னப்புவப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வென்னப்புவ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X