2025 மே 05, திங்கட்கிழமை

நுரைச்சோலையின் சுற்றுச்சூழல் பிரச்சினையை தீர்க்க முஸ்தீபு

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 11 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மேல் மாகாணத்தில் அமைந்துள்ள நுரைச்சோலை மின் நிலையத்தால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஒழுங்குறுத்துகை செய்வதற்கு,  உயர் நீதிமன்றமானது அண்மையில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவைப் பணித்திருந்தது.

மின் நிலையத்தால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான அடிப்படை உரிமை மனு மீதே, இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அப்பிரதேசத்தில் சாம்பல் துகள் காற்றில் பரவுதல் மற்றும் எஞ்சியிருக்கும் நிலக்கரி ஆகியவற்றால் ஏற்பட்ட சேதங்களை குறைக்கும் செயன்முறை, ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டதைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது நிரூபித்தது.

2016ஆண்டு மார்ச் மாதத்தில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட விற்பன்னர்கள் அடங்கிய குழுவானது, இலங்கையில் அனல் மின்னிலையங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கங்கள் பற்றிய கற்றலை ஏற்கெனவே ஆரம்பித்துள்ளது.

சட்டத்தால் அதிகாரமளிக்கப்பட்டவாறு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவே, இந்த சுற்றுச்சூழல் பிரச்சினை தொடர்பான விடயங்களை அவதானிக்கும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்றத்தின் பணிப்பின்படி, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, கடந்த 5ஆம் தியதியன்று, விற்பன்னர்கள் குழுவைக் கூட்டியது. இக்கூட்டத்தில் இலங்கை மின்சாரசபை,  மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வடமேல் மாகாண சுற்றாடல் அதிகார சபை, கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், குறித்த அடிப்படை உரிமை வழக்கைத் தாக்கல் செய்த என்விரொன்மெண்டல் ஃபௌண்டேஷன் நிறுவனம், நுரைச்சோலை மீனவர் சமூகம், விவசாயிகள் சமூகம் ஆகியோரும் பங்குபற்றினர். இந்தப் பிரச்சனைக்கான ஒருங்கிணைந்த தீர்வை முன்மொழியுமாறு, கூட்டத்தில் பங்கேற்றோரிடம் கோரப்பட்டது.

நுரைச்சோலை மின்னிலையம் என்று அழைக்கப்படும் ‘லக்விஜய’ மின் நிலையமானது, நிலக்கரியால் இயக்கப்படும் இலங்கையின் பாரிய மின் நிலையம் ஆகும். 900 MW சக்தியை பிறப்பிக்கும் இந்த மின் நிலையம், நாட்டின் ஒட்டுமொத்த சக்தித்தேவையில் 39% இனை பூர்த்தி செய்வது குறிப்பிடத்தக்கது.

பிரதேச மக்கள் எழுப்பிய பிரச்சனைகள் தொடர்பின் இந்தக் குழுவானது தீவிரமாக கலந்துரையாடியது. மேலும் பிரதேச மக்களின் பிரச்சனைகள் மற்றும் ஆலோசனைகளை, எழுத்துமூலமாக இக்குழுவுக்கு வழங்குமாறும் கோரிக்கை விடப்பட்டது.

இந்தக் குழுவின் அடுத்த கூட்டமானது, எதிர்வரும் 24ஆம் திகதி திங்கட்கிழமை கூடவுள்ளதுடன், இக்கலந்துரையாடல்களின் முடிவுகள், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் உயர் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X