2025 நவம்பர் 05, புதன்கிழமை

புத்தளத்தில் இடை நடுவில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

Princiya Dixci   / 2016 மே 04 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் முன்னைய நகர சபை நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல தீர்மானித்துள்ளதாக புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி தெரிவித்துள்ளார்.

புத்தளம் நகர சபையில் அண்மையில் நடைபெற்ற நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் மற்றும் நகர சபையின் அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் இவ்விடயம் தொடர்பாக இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், புத்தளம் நகரில் காணப்படும் பிரதான பிரச்சினையான வடிகான் பிரச்சினை முதலில் தீர்த்து வைக்கப்படவுள்ளது. 

இதன் முதற் கட்டமாக புத்தளம் நான்காம் வட்டாரம், கடையாக்குளம், ஒன்பதாம் வட்டார வடிகான் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படவுள்ளன. அமைச்சர்களான நாவின்ன மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோரின் 50 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இரண்டு வருட காலத்துக்குள் இது தீர்த்து வைக்கப்படவுள்ளது. 

புத்தளம் பொது சந்தை கட்டடம் மற்றும் புத்தளம் நகர மண்டப வேலைத்திட்டங்களையும் உடனடியாக முன்னெடுக்க உள்ளோம். இதன் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பாக உரிய அதிகாரிகள் நேரடி களம் விஜயம் செய்து ஆராய்ந்து இந்த வருட இறுதிக்குள் இந்த இரு கட்டட வேலைகளையும் நிறைவடையச் செய்ய உத்தேசித்துள்ளோம்.

முன்னைய நகர சபை நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்பட்ட அல்பா, பீட்டா நவீன சந்தை கட்டட தொகுதி வேலைகளையும் உடனடியாக ஆரம்பிக்க உள்ளோம். இதேவேளை, புத்தளம் - கொழும்பு முகத்திடலை மேலும் அழகு படுத்தி கொழும்பு வீதியில் அமைந்துள்ள பௌத்த விகாரை வரையும் விசாலப்படுத்தி, சுற்றுலா பயணிகளைக் கவரும் விதத்தில் அமைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X