2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சுற்றுலாத்துறைக்கு நிவாரணம் வேண்டும்

Editorial   / 2020 ஓகஸ்ட் 16 , பி.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த மார்ச் நடுப்பகுதி முதல், நாட்டினுள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விஜயம் செய்வது தடைப்பட்டுள்ளதன் காரணமாக, சுற்றுலாத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் ஏற்கெனவே பெற்றுக் கொண்ட கடன்களில் தமது செயற்பாடுகளை ஓரளவேனும் முன்னெடுத்த வண்ணமுள்ளன.இந்நிலையில், தாம் பெற்றுக் கொண்ட கடன்களை மீளச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை இரண்டு வருடங்கள் வரை நீடிக்குமாறு, ஒன்றிணைந்து அரசாங்கத்திடம் கோரியுள்ளன.

தொற்றுப் பரவல் காரணமாக கடன்களை மீளச் செலுத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலம் செப்டெம்பர் இறுதியுடன் நிறைவடையவுள்ளதுடன், இந்தக் காலப்பகுதியை மேலும் இரண்டு வருடங்கள் வரை நீட்டித்துக் கொள்வதற்கு அரசாங்கத்தின் தலையீட்டை சுற்றுலாத் துறை எதிர்பார்க்கின்றது.

இலங்கை சுற்றுலா ஹோட்டல்கள் சம்மேளனத்தின் தலைவர் சனத் உக்வத்த கூறுகையில், “பொதுத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், புதிய அரசாங்கம் இந்தக் கடன் மீளச் செலுத்தல் சலுகைக் காலத்தை நீட்டிப்பது தொடர்பில் கவனம் செலுத்தும் என நாம் எதிர்பார்க்கின்றோம். தொற்றுப் பரவல் காரணமாக எமது துறை பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. இதனால், இரண்டு வருடங்கள் வரை எமது கடன்களை மீளச் செலுத்துவதற்கு சலுகைக் காலம் தேவைப்படுகின்றது. அரசாங்கம் தனது சுற்றுலாத் துறை தொடர்பான மூலோபாயத்தில் தெளிவாக உள்ளது. ஏற்றுமதி அந்தஸ்துடன் சுற்றுலாத்துறைக்கு உரிய கௌரவிப்பை வழங்கியுள்ளது. இந்தத் துறையை வழிநடத்துவதற்கு அனுபவம் வாய்ந்த செயலணியை அரசாங்கம் நிறுவியுள்ளது” என்றார். 

குறிப்பாக, இந்தத் துறைக்கு அரசாங்கத்தால் வரி நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி மற்றும் பெறுமதி சேர் போன்றன நீக்கப்பட்டுள்ளன. சுற்றுலாத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக வழங்கப்பட வேண்டியுள்ள கடன் இதுவரையில் வழங்கப்படவில்லை எனவும், ஆறு மாத காலப்பகுதிக்கான கடனினூடாக, சுற்றுலாத்துறையைச் சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு 20,000 ரூாய் வரை சம்பளம் வழங்கக்கூடியதாக இருக்கும்” எனவும் உக்வத்த கூறினார்.

ஊழியர்களை தக்க வைத்துக் கொள்வதற்கு துறையில் முயற்சிகள் இடம்பெற்ற போதிலும், துறைசார் நிறுவனங்கள் தொடர்ந்தும் இயங்க வேண்டியதை உறுதி செய்வதற்கு முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் பணிக்குத் திரும்புவதற்கு நிறுவனங்கள் இயங்கும் நிலையில் இருக்க வேண்டும் எனவும், உக்வத்த மேலும் கூறினார்.

பெருமளவு சுற்றுலாத்துறை ஊழியர்கள் தற்போது தமது வீடுகளில் காணப்படும் நிலையில், புதிதாக இணைந்து கொண்டவர்கள் முதலில் பணி நீக்கம் செய்யப்படுவது எனும் அடிப்படையில் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டிய நிலை எழுந்துள்ளதாக, உக்வத்த குறிப்பிட்டார்.
கொவிட்-19 தொற்றுப் பரவலுடன் வழங்கப்பட்ட கடன்களை மீளச் செலுத்துவதற்கான சலுகைக் காலத்தில் நீட்டிப்பை கோர தாமும் திட்டமிட்டுள்ளதாக, இலங்கை உள்ளக சுற்றுலா செயற்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் மஹேன் காரியவசம் தெரிவித்தார்.

ஊழியர்களுக்கு சம்பளக் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்காக கடன் வழங்கும் திட்டம் தாமதமாவதற்கு காரணம், இலங்கை வங்கிக்கு இந்தக் கடன்களை வழங்குமாறு இலங்கை மத்திய வங்கியிடமிருந்து அறிவுறுத்தல் வழங்கப்படாமையே என, அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .