2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

அரையாண்டில் செலான் வங்கியின் வரிக்கு பின்னரான இலாபம் 21% வளர்ச்சி

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 22 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


செலான் வங்கி 2014 ஜூன் 30ஆம் திகதி முடிவடைந்த 6 மாத காலப்பகுதியில் வருமான வரிக்கு முன்னரான இலாபமாக ரூபா 1,863 மில்லியனை பெற்றுக் கொண்டதன் மூலம் மனதில் பதியத்தக்க சிறந்த நிதிப் பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளது. வரிக்குப் பின்னரான இலாபமாக ரூபா 1,213 மில்லியன் அடைந்து கொள்ளப்பட்டுள்ளதுடன், 2013 ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலப்பகுதிக்கான வரிக்குப் பின்னரான இலாபமாக பதிவு செய்யப்பட்ட ரூபா 1,002 மில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 21% அதிகரிப்பாகவும் காணப்படுகின்றது. 
 
இதேவேளை இக்காலாண்டு காலப்பகுதியில் வங்கியின் வரிக்குப் பின்னரான இலாபமாக பதிவுசெய்யப்பட்டுள்ள ரூபா 698 மில்லியன் என்ற தொகையானது, கடந்த வருடத்தின் தொடர்புபட்ட இதே 3 மாதங்களில் பெற்றுக் கொள்ளப்பட்ட ரூபா 497 மில்லியன் வரிக்குப் பின்னரான இலாபத்துடன் ஒப்பிடுகையில் 41% அதிகரிப்பாக உள்ளது. 
 
2014 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த 6 மாதங்களில் தேறிய வட்டி வருமானம் ரூபா 4.27 பில்லியனில் இருந்து ரூபா 5.16 பில்லியனாக, 21% இனால் அதிகரித்துள்ளது. தேறிய கட்டண மற்றும் தரகு வருமானம் ரூபா 973 மில்லியனில் இருந்து ரூபா 1,056  மில்லினாக உயர்வடைந்தது. கடந்த பல வருடங்களாக செலான் வங்கி திடமான வளர்ச்சிப் போக்கை தொடர்ச்சியாக பேணுவதை வெளிப்படுத்தி வந்த நிலையிலேயே இந்த நிதிப் பெறுபேறுகள் அடைந்து கொள்ளப்பட்டுள்ளன. 
 
2014ஆம் ஆண்டின் முதலாவது அரையாண்டு காலப்பகுதியில், செலான் வங்கி தனது வைப்புத் தளத்தை ரூபா 167.4 பில்லியனில் இருந்து ரூபா 172.7 பில்லியனாக அதிகரித்துக் கொண்டுள்ளது. இவ்வளர்ச்சியானது குறிப்பாக நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்குகளை 'தயார்நிலைப்படுத்தியதன்' ஊடாக அடையப் பெற்றுள்ளது. இவ்வாறான நடவடிக்கையின் மூலம் 2013ஆம் ஆண்டின் இறுதியில் 33% ஆக பதிவுசெய்யப்பட்டிருந்த வங்கியின் குறைந்த செலவு வைப்புத் தளத்தை 2014 ஜூன் மாத இறுதியில் 35% இற்கும் அதிகமானதாக உயர்வடைச் செய்வதற்கு இடமளித்தது. எவ்வாறிருந்த போதிலும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இக் குறிப்பிட்ட 6 மாத காலப்பகுதியில் செலான் வங்கியின் தேறிய முற்பணத் தொடர் ரூபா 136.5 பில்லியனிலிருந்து ரூபா 133.1 பில்லியனாக வீழ்ச்சியடைந்தது. இத்துறையில் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மந்தமான கடன் வளர்ச்சி மற்றும் குறைந்த தங்க விலைகளால் ஏற்பட்ட தாக்கம் என்பவற்றின் காரணமாகவே இவ் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. 
 
தங்க விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் அதன் விளைவாக அடகு வைக்கும் சேவைத் தளத்தில் ஏற்பட்ட தாக்கம் போன்ற பாதக நிலைமைகளுக்கு மத்தியிலும், செயற்றிறன்மிக்க மீள்-அறவீட்டு மற்றும் மீளமைப்பு முயற்சிகளின் ஊடாக செலான் வங்கியால் தனது சொத்துத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள முடிந்தது. 2014 ஜூன் மாத இறுதியில் தனது மொத்த செயற்படா சொத்துக்களை (IIS இன் தேறிய பெறுமதி) 10.86% என்ற மட்டத்தில் பேணிக் கொள்வதற்கு வங்கிக்கு இது இடமளித்தது. இதேவேளை, இதன் பெறுமதியை இவ்வருட இறுதியில் ஒற்றை இலக்க மட்டத்திற்கு குறைப்பதற்கு வங்கி திடசங்கற்பம் பூண்டுள்ளது. 

 
செலான் வங்கி 2013ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனது மூலோபாய திட்டத்தின் மீதான மீளாய்வை வெற்றிகரமாக பூர்த்தி செய்து, அதனை தரமேம்படுத்தி உள்ளது. வங்கியின் மூலோபாய திட்டத்தை 2016ஆம் ஆண்டு வரைக்கும் விரிவுபடுத்தியதன் மூலம் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூலோபாய திட்டத்தின் மீதான மீளாய்வில் முக்கியமாக கவனம் செலுத்தப்பட்ட விடயங்களுள் - முற்பண/ வைப்பு வளர்ச்சி, கிளை விஸ்தரிப்பு, வாடிக்கையாளர் சேவை மேம்படுத்தல், ஊழியர் அபிவிருத்தி,  செயற்படா சொத்து (NPA) குறைப்பு, செலவுக் கட்டுப்பாடு, புதிய சேவை உருவாக்கம், தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு மற்றும் பங்குதாரர்கள் பெறுமதி போன்றவை உள்ளடங்கும். 
 
கல்வியை மையமாகக் கொண்ட கூட்டாண்மை சமூகப்பொறுப்பு முன்முயற்சிகளை செலான் வங்கி தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற அதேநேரம், வசதி குறைந்த பாடசாலைகளுக்கான தனது 100 நூலங்கள் செயற்றிட்டத்தை மேலும் விரைவுபடுத்தி இருக்கின்றது. 2014ஆம் ஆண்டில் இதுவரைக்கும் இவ்வாறான 18 பாடசாலை நூலகங்கள் செலான் வங்கியால் திறந்து வைக்கப்பட்டுள்ளன. 
 
கிளைகளை வேறு இடங்களுக்கு இடமாற்றல் மற்றும் தரமேம்படுத்தல் செயற்றிட்டமும் 2014 இன் 1ஆம் அரையாண்டு காலப்பகுதியில் முழு மூச்சுடன் முன்னெடுக்கப்பட்டது. வரையறுக்கப்பட்ட தொழிற்பாடுகளுடன் இயங்கிவந்த 19 சௌகரிய வங்கியியல் நிலையங்கள் வாடிக்கையாளர்களின் சேவை அனுபவத்தை மேம்படுத்தும் பொருட்டு 2014 ஜூலை மாதத்தில் முழுமையான கிளை அந்தஸ்து கொண்டவைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன. 2014 ஜூன் 30ஆம் திகதி இருந்தவாறு செலான் வங்கியின் சேவை நிலைய வலையமைப்பானது 151 கிளைகள், 162 ATM மையங்கள் மற்றும் 92 மாணவர் சேமிப்பு நிலையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. 
 
2014 இரண்டாம் காலாண்டின் இறுதியில் செலான் வங்கியின் 'மொத்த மூலதன போதுமான தன்மை வீதம்' 15.27% ஆக உயர்ந்தமட்டத்தில் பதிவாகியது. இத்துறையின் ஒழுங்குபடுத்துனரால் வரையறை செய்யப்பட்டிருக்கும் மட்டத்தை விடவும் இது மிகவும் அதிகமானதாகும்.
 
செலான் வங்கி இவ்வாறான சிறந்த தொழிற்பாடுகளை மேற்கொண்டதன் பயனாக, 2014 – இரண்;டாம் காலாண்டில் பங்கொன்றிற்கான உழைப்பு ரூபா 3.51 ஆக காணப்பட்டதுடன்,  (வரிக்கு முன்னரான இலாபத்தில்) சொத்துக்கள் மீதான வருமானம் மற்றும் உரிமை மீதான வருமானம் ஆகியவை முறையே 1.70% ஆகவும் 11.06% ஆகவும் உயர்ந்த மட்டத்தில் பதிவாகியது. அதேவேளை, 2014 ஜூன் 30ஆம் திகதி இருந்தபடி செலான் வங்கியின் பங்கொன்றிற்கான தேறிய சொத்துப் பெறுமதி ரூபா 64.90 ஆக (குழுமம் ரூபா 67.71) காணப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X